தென்காசியில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கல்
1 min readProvision of free uniform to students in Tenkasi
30.7.2024
தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி இசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவியர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, கிராமப்புறத்தில் உள்ள தையல் தெரிந்த பெண்களை குழுவாக இணைத்து, பெண்களுக்கு வருமான வாய்ப்பு ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக வாழ்வில் முன்னேற தமிழக அரசால் எழுது பொருள் மற்றும் காகித அட்டை தயாரித்தல் மற்றும் அச்சிடுதல் சங்கம் 1980 ஆம் ஆண்டு முதன் முதலில் துவங்கப்பட்டு பின்பு 2013 ஆம் ஆண்டு அண்ணாமலை தையல் தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் திருநெல்வேலி அண்ணா மகளிர் காகித அட்டை எழுது பொருள் மற்றும் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் கிராமப்புறத்தை உள்ளடக்கிய தையல் தெரிந்த குறிப்பாக 20 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள 1074 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இச்சங்கம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் விலையில்லா சீருடை 1021 பள்ளிகளில் 69,689 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.
இன்றைய தினம் இசி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 71 மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி மதிவதனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.
உதயகிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி நகர்மன்ற உறுப்பினர் வசந்தி வெங்கடேசன், மகளிர் தையல்தொழில் கூட்டுறவு சங்க
செயலாளர் ச.சின்னப்பன். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.