கண்ணாயிரத்தை மாட்டிவிட்ட செருப்பு/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readThe slipper that caught Kannayiram / comic story / Tabasukumar
18.8.2024
கண்ணாயிரம் அழகாக மேக்கப் செய்துகொண்டு தன்னை இருபது வயது வாலிபராகக் கருதி மாலை வேளையில் பஸ்நிறுத்தத்தில் பெண்களை பார்க்கச் சென்று குமரி பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்கவரலாமா என்று பாட்டுப்பாட அதைக்கேட்ட ஒரு பெண்.. செருப்பு பிஞ்சிடும் என்றார்.
அதனால் கண்ணாயிரம் செருப்புக்கடைக்குச் சென்று பெண்களுக்குப் பிடிக்கிற செருப்பு கொடுங்க என்று கேட்க, கடைக்காரர் லேடீஸ் செருப்புகள் கொடுக்க கண்ணாயிரம் பணம் கொடுத்து அந்த பார்சலை வாங்கிக்கொண்டு பழையசெருப்பை அணிந்தபடி வீட்டுக்கு வேகமாக நடந்தார்.
அப்போது காலில் போட்டிருந்த ஒரு செருப்பு அறுந்ததால் கண்ணாயிரம் அடுத்து என்ன செய்வது என்று விழித்தார். செருப்பு பிஞ்சிடும் என்று பஸ்நிறுத்தத்தில் பெண் சொன்னது உண்மையாகிவிட்டதே.. நல்ல வேளை புதுச்செருப்பு வாங்கிவிட்டேன் என்று மகிழ்ந்தார். இனி ஒற்றைக்கால் செருப்போடு எப்படி நடப்பது என்று யோசித்தவர் வெறுங்காலோடு போய்விடலாம் என்று நினைத்தார். அறுந்த செருப்பையும் மற்றொரு செருப்பையும் ஒரு கையில் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.
அதைப்பார்த்தவர்கள்.. என்ன கண்ணாயிரம்.. இது சுட்ட செருப்பா.. சுடாத செருப்பா என்று கேட்க.. கண்ணாயிரம்.. கோபத்தில் எல்லாம் காசு கொடுத்து வாங்கின செருப்பு.. தெரியுமா என்றார்.
அப்புறம் ஏன் கையிலே தூக்கிட்டுப் போற என்று அவர் கேட்க, அத்துப்போன செருப்பை கையிலே தூக்காம எப்படி தூக்க முடியும் என்று கண்ணாயிரம் பதில் அளித்தார்.
உடனே அவர்..சரி கண்ணாயிரம் கையிலே என்ன பார்சல் என்று கேட்டபோது அதுவா செருப்பு என்று கண்ணாயிரம் சொன்னார்.
உடனே அவர்..சரி..பார்சலில் இருப்பதும் அறுந்த செருப்பா என்று கேட்டுவைக்க கண்ணாயிரம் கோபமானார். ஏங்க அது புதுச்செருப்புங்க..என்றார்.
என்னங்க பழையசெருப்பு அதை கையிலே தூக்குறீங்க..சரி..புதுசெருப்பையும் ஏன் கையிலே தூக்கிறீங்க ,அதை காலில் போடவேண்டியதுதானே என்று அவர் கேட்டதும் கண்ணாயிரம்..ம்..புதுச்செருப்பை நாளைக்கு காலையிலே கடைவீதிக்குப் போகும்போதுதான் போடணும் என்றார்
அதற்கு அவர்..ஏம்பா பழைய செருப்பை தூக்கி கீழே போடவேண்டியதுதானே என்க, கண்ணாயிரம்..அட போங்க..பழைய செருப்பானாலும் நல்லா உழைக்கும். அறுந்துபோனதை தைக்கணும். காட்டுக்குப் போகும்போது போட்டுக்கலாம் என்றார்.
உடனே அவர்..ஏம்பா கண்ணாயிரம்..செருப்புன்னால பிரச்சினை என்று கொஞ்ச நாள் செருப்பு போடாம இருந்திய.. இப்போ ஏன் போடுற என்று கேட்டபோது கண்ணாயிரம் ஆத்திரம் அடைந்தார்.
நான் செருப்பு போடாம இருந்தேன்னு யார் சொன்னது என்று கண்ணாயிரம் கேட்க, அவர் நான்தான் சொன்னேன் என்க கண்ணாயிரம் செருப்பால அடிப்பேன் என்று விரட்ட அவர் அய்யோ அம்மா என்று தப்பி ஓடினார்.
கண்ணாயிரத்துக்கு பழைய நினைவுகள் மறந்தது அவருக்கு தெரியாதல்லவா..அவர் ஊருக்குள் ஓடி..கண்ணாயிரத்துக்கு என்னமோ ஆயிட்டு என்று சொல்ல..கையில் செருப்புடன் வந்த கண்ணாயிரத்தைப் பார்த்து எல்லோரும் கதவை அடைத்தனர். கண்ணாயிரம் அதைப்பார்த்து.. ஊரார் மரியாதை கொடுப்பதாக நினைத்து.. இப்பதான் ஊர்காரங்க மதிக்காங்க.. என் எதிரே எவனும் வரக்கூடாது என்று பயந்து ஒளியுறானுவ..அந்த பயம் இருக்கணும் என்று நெஞ்சை நிமிர்த்தியவாறு லெப்ட் ரைட்டு என்று வீட்டை நோக்கி நடந்தார்.
(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.