கண்ணாயிரத்தை குழப்பிய நான் வெஜிட்டேரியன்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readnon vegetarian who confused Kannayira/ comedy story/ Tabasukumar
13.9.2024
கண்ணாயிரம் பெண்களுக்கு பிடித்த செருப்பு வாங்க வேண்டும் என்று லேடிஸ் செருப்பு இரண்டை பெட்டியில் வாங்கிவந்தார்.வழியில் அவர் ஏற்கனவே போட்டிருந்த செருப்பு அறுந்ததால் அதை கையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்துவந்தார். அவர் வந்த கோலத்தைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடினார்கள். அதை அறியாமல் கண்ணாயிரம் சிரித்துக்கொண்டே வீட்டுக்கு வந்தார்.
பூங்கொடி தனது பெற்றோர் வீட்டுக்குப் போய்விட்டதால் கண்ணாயிரம் தானே சமையல் செய்ய நினைத்தார். அம்மாவை காணவில்லை. அவர் எந்த கோவிலுக்குப் போனார் என்று தெரியவில்லை. அவர் வரும்வரை நாம் சமைக்க வேண்டியது தான் என்று சமையல் அறைக்குள் புகுந்தார். அடுப்பை பற்றவைக்க உள்ளே போனார். அவருக்கு விறகு அடுப்புதான் நினைவில் இருந்தது.
எங்கே பானை எங்கே.. அடுப்பை எங்கே.. விறகு எங்கே..எல்லாம் எங்கே போச்சு.. ஒண்ணையும் காணம்.. எங்கே போச்சு.. விறகு அடுப்பிலதான நான் சமையல் செஞ்சி பழக்கம்.. அது இல்லாம நான் என்ன செய்யமுடியும்.. என்று விழித்தார்.
ம்..வயிறு பசிக்கு..கடையிலே போயி சாப்பிடுவோம்.. பிறகு விறகு அடுப்பு வாங்குவோம் என்று நினைத்தார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள ஓட்டலுக்குப் போனார். இட்லி தோசை இருக்கா என்று கேட்க, ஓட்டல் ஊழியர், தோசை இட்லி இருக்கு என்றார். அதைக் கேட்ட கண்ணாயிரம் கோபத்தில், நான் இட்லி தோசை கேட்டா, தோசை இட்லி இருக்கு என்கிறான். நமக்கு சரிப்படாது என்றபடி அந்த ஓட்டலிலிருந்து வெளியே வந்தார்.
அருகில் நான் வெஜிட்டேரியன் ஓட்டல் என்று பெயர் பலகை போடப்பட்டிருந்தது. இந்த ஓட்டல் புதிதாக இருக்கிறதே என்று உள்ளே நுழைந்தார். என்ன நான்வெஜிட்டேரியன்னு போட்டிருக்கீய.. நான் வெஜிட்டேரியன்னு உங்களுக்கு எப்படி தெரியுமுன்னு கேட்டார்
ஓட்டல் காரர் இது நான் வெஜிட்டேரியன் ஓட்டலுங்க.. என்றார்.
கண்ணாயிரத்துக்குப் புரியவில்லை. நான்வெஜிட்டேரியன் என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு கடைஊழியர் அதுவா அசைவ ஓட்டல் என்றார்.
ஓ..அப்படின்னா என்ன என்று கண்ணாயிரம் இழுக்க, கடை ஊழியரோ.. அதுவா.. இந்த ஆடு, கோழி, மீனு, முட்டை எல்லாம் கிடைக்கும் என்றார்.
கண்ணாயிரம் அப்படியா.. ஒரு ஆடு என்னவிலை என்று கேட்டார். ஓட்டல் ஊழியர் பதறிப் போனார். யோவ்.. இது ஆடு விக்கிற கடை இல்லை. இது ஆட்டு இறைச்சி விக்கிற கடை என்க, கண்ணாயிரம், அப்படியா.. கிலோ என்னவிலை என்றார்.
ஓட்டல் ஊழியருக்கு பகீரென்றது. யோவ்.. உம்மிடம் பேசினா எனக்கே குழப்பமா போயிடும் போல.. இறைச்சி விக்கமாட்டோம். மட்டன் குருமா, சுக்கா வறுவல், மீன் பொரியல், அவித்த முட்டை இப்படி எல்லாம் கிடைக்கும்.. வெஜிடேரியன் ஓட்டலில் இது கிடைக்காது. எலலாம் காய்கறி அயிட்டம்தான்.. சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் இப்படி அயிட்டங்களா கிடைக்கும்.. சரி.. நீங்க வெஜிட்டேரியனா.. நான் வெஜிட்டேரியனா என்று அவர் கேட்க கண்ணாயிரம் அவசரமாக நான் வெஜிடேரியன் என்றார்.
ஓட்டல் ஊழியர் மகிழ்ச்சியாக.. அப்படியா.. சரி சாப்பிடுங்க.. உட்காருங்க என்றார்.
கண்ணாயிரம் மகிழ்ச்சியாக சேரில் உட்கார்ந்தார். ஓட்டல் ஊழியர் மின்விசிறியைச் சுழலவிட்டார். இலை விரித்து, தண்ணீர் தெளித்தார்.
கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஓட்டல் ஊழியர் மெல்ல, உங்களுக்கு என்ன வேணும் சுக்கா வறுவல், ரோஸ்ட் , மீன் பொரியல், அவித்த முட்டை என்று கேட்டார்.
கண்ணாயிரம் கண்களை விழித்தபடி, அதுவா நாலு இட்லி, இரண்டு வடை அப்புறம் சாம்பார் சட்னி என்று சொன்னார்.
அதைக்கேட்ட ஊழியர் கோபமாகி.. யோவ்,உதெல்லாம் இங்கே கிடையாதுய்யா.. நான் கேட்டபோது, நான் வெஜிட்டேரியன் அப்படிதானய்யா சொன்ன. அப்படியிருக்கும் போது சுக்கா, வறுவல் கேட்காம.. இட்லி வடைன்னு கேட்கிறீயய்யா.. இது நியாயமா.. இப்போ சொல்லுய்யா நீ வெஜிட்டேரியனா இல்லை நான்வெஜிடேரியனா என்று அழுத்திக் கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம் நான்…வெஜிட்டேரியன் என்றார்.
அதைக்கேட்ட ஊழியர் அய்யய்யோ..இன்னும் என்னமெல்லாம் சொல்வான்னு தெரியல..என்னை காப்பாத்துங்க என்றபடி சமையல் அறைக்குள் ஓடினார்.
கண்ணாயிரம் புரியாமல் விழித்தபடி இருக்க, கடை முதலாளி மெல்ல வந்து.. உங்களுக்கு என்ன வேணுமுன்னு கேட்க, நான் வெஜிட்டேரியன், நாலு இட்லி ,இரண்டு வடை என்க கடை முதலாளிக்கு தலைசுற்றியது.(தொடரும்)
வே.தபசுக்குமார்,புதுவை.