அறுபடை வீடுகளில் ரூ.789.85 கோடியில் 251 பணிகள் – மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min read
251 works are going on in Arupada houses at a cost of Rs.789.85 crore. – M.K. Stalin’s speech
24.8.2024
தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது.
பழனியில் உள்ள பழனி யாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு கொடியை ரத்தின கிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் இ.பெரியசாமி, சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத் துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத் துறை அமைச்சராக வந்த பிறகு இந்த துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கோவிலை கவனித்துக் கொள்ளுங்கள் என்று நான் அறநிலையத்துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் ஒருவர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்து உள்ளார்.
நாள் தோறும் ஆன்மிக பெரியவர்கள், அறநிலையத்துறையையும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திட்டங்கள் செயல்படுத் தப்படுகிறது.
நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். அந்த வரிசையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து, குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்தவாரி யாரும் பாராட்டினார்கள்.
இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். அதோட அடையாளம்தான் பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது.
அந்த வகையில் பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட உடனே அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டு வரும் பணிகளின் பட்டியலை தரச்சொல்லி அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய 7 முருகன் திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பக்தர்கள் நலனை மனதில் வைத்து கோவிலில் வளர்ச்சி பணிகளை தொடங்கி இருக்கிறோம்.
வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை ரூ.58 கோடியே 54 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடு முருகன் திருக்கோவில்களில் ரூ.789 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோவில்களில் ரூ.277 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது.
69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.
பழனி திருக்கோவிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி கோவில் திருக்கோவிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை ரூ.4000 ஆக உயர்த்தியும், 54 குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1500 வழங்கப்பட்டதை 2000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கி வருகிறோம்.
2024-ம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப் பயணத்துக்காக 1000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவாார்கள் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதுநாள் வரை 813 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.
எல்லா திருக்கோவில்களிலும் பக்தர்களுக்கு கட்டண மில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
தவில், நாதசுவர கல்லூரி, அர்ச்சகர் மற்றும் வேதஆகம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை 24.11.2023 முதல் ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்த 13 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த திருக்கோவில்களில் பணிபுரிந்து பணி காலத்தில் மறைவு எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை திருக்கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வந்த 1298 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருக்கோவில் பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல, ஊக்கத் தொகை உயர்வு செய்தல், தினக்கூலி மற்றும் தொகுப்பூ தியத்தில் பணிபுரிந்த 1298 பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
ஏதோ திடீரென்று பழனியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அது மட்டுமல்ல அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.
திராவிட மாடல் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று விளக்கிக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையையும் மிக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
தி.மு.க.வின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசால் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டு சின்னங்களான கோவில்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். முறையாக செயல்படும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இன்று சீரோடும் சிறப்போடும் கோவில்கள் இயக்க அடித்தளம் அமைத்தது அந்த சட்டம்தான். கடந்த 3 ஆண்டு காலத்தில் 1355 திருகோவில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.3776 கோடியில் 8436 திருக்கோவில்களில் திருப்பணிகள், ரூ.50 கோடியில் கிராமப்புற ஆதிராவிடர் கோவில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம். ரூ.62 கோடியே 76 லட்சம் ரூபாயில் 27 திருக்கோவில்களில் ராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.80 கோடியே 50 லட்சத்தில் பழனி, இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.5577 கோடி மதிப்புடைய 6140 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 756 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும் 82 ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள்.
கோவில் சொத்துக்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோபர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64522 கற்கள் நடப்பட்டு உள்ளன.
4189 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளது. இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு.
நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்து சமய அறநிலையத் துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டு இருக்கிறது. அதில் இருக்கும் சிலவற்றை தான் நான் இப்போது சொல்லி இருக்கிறேன். அந்த புத்தகத்தை நீங்கள் எல்லோரும் வாங்கி படிக்க வேண்டும். ஊடக துறையை சேர்ந்த நண்பர்களும் இந்த சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அந்த சானைகளுக்கு மகுடம் வைத்தது போல பழனியில் நடக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாடு ஆன்மிக வரலாற்றிலேயே மிக சிறப்பான இடத்தை பெறும்.
நீதியரசர்கள், மகாசன்னி தானங்கள், ஆன்மிக பெரியவர்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள், பாடகர்கள் என பல்துறை அறிஞர்கள் பழனியில் சங்கமிக்கிற இந்த மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுரு பரசு வாமிகள, ரத்தினபுரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் பரம்நந்தா, மலேசிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்றை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மொ.நா.பூங்கொடி, கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சுரேஷ்குமார், வேல்முருகன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் முருகனின் சிறப்புகளை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள், மெய்நிகர் காட்சிகள், முப்பரிமண பாடலங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஆய்வரங்கங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
கல்தூண் வடிவம் போன்று இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தையும் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த சிற்பகலைஞர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உருவாக்கி அழகு படுத்தினர்.
கண்காட்சியில் முருகனின் பல்வேறு திருப்பெயர்கள், முருகன் பெயரில் உள்ள பெண்களுக்கான தமிழ் பெயர்கள், தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முருகனின் கோவில்கள் குறித்த விவரங்கள், முருகனின் படைக்கலங்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களுடன் இடம்பெற்றுள்ளன.
மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இம்மாநாடு முத்தாய்ப்பாக அமைவதோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென் மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவகையும் கொள்ளச் செய்யும் வகையில் இன்றும், நாளையும் சிறப்பாக நடைபெறும்.