அமைச்சர் பதவி பறிப்பு: நன்றி தெரிவிக்கிறார் மனோ தங்கராஜ்
1 min read
Mano Thangaraj thanks everyone for their cooperation
29.9.2024
தமிழக அமைச்சரவையில் நேற்று அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பால்வளத்துறையை கவனித்தது குறித்து முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
“2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5 சதவீதம் என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4சதவீதமாகவும், 2023-ல் 25சதவீதமாகவும் உயர்ந்தது.
2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி! மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.