June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கனமழை எச்சரிக்கை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

1 min read

Heavy rain warning: School and college holidays tomorrow in 4 districts including Chennai

14.10.2024
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை(அக்.,15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை (அக்.,15) முதல் அக்டோபர் 18ம் தேதி வரை ஐ.டி.,நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். வெள்ளத்தால் பாதிக்க கூடிய பகுதிகளில் மீட்பு படகுகளை இன்றே நிறுத்த வேண்டும். மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும்.
தங்குதடையின்றி, ஆவின் நிறுவனம் மூலம் பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப்பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். கனமழை எச்சரிக்கை இருப்பதால், பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம். நிவாரண முகாம்களை தயாராக வைக்க வேண்டும். மக்களை முன்கூட்டியே தங்க வைக்க வேண்டும். முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை தண்ணீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். ரொட்டி, தண்ணீர் பாட்டில்களை இன்றே நிவாரண முகாம்களில் இருப்பு வைக்க வேண்டும். சாலைப்பணிகள் நடக்கும் இடங்களில் ஒளிரும் பட்டைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். மழையளவு, அணைகளின் நீர்வரத்தை கண்காணித்து நீர் மேலாண்மை செய்ய வேண்டும். மின் உற்பத்தி, மின் விநியோகம் சீராக இருக்க கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்களை உறுதி செய்ய வேண்டும்.

கார், பைக் வைத்திருப்போர்கள் கனமழைக்கான திட்டமிடுதல், முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், விடுதிகளில் தங்கியிருப்போர் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முன்னெச்சரிக்கைப்படி மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *