கடையம் உள்பட பல இடங்களில் ரூ.2 கோடி நில மோசடி; 3 பேர் கைது- 13 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
1 min read
Rs 2 crore land fraud in many places including shop; 3 arrested – 13 arrested
14.10.2024
தென்காசி, நெல்லை மாவட்டத்தில்
தனியார் நிறுவன நிலங்கள் மோசடியாக விற்பனை செய்த வழக்கில் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மூன்று பேர்களை கைது செய்தனர் மேலும் 13 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 16 பேர் மீது தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றின் நெல்லை, தென்காசி மண்டல மாவட்ட மேலாளராக ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பணியாற்றி வருகிறார். பாவூர்சத்திரம் சந்தோஷ்நகரைச் சேர்ந்தவர் வடிவேல் என்பவரது மகன் சேர்மத்துரை. இவர் இதே நிறுவனத்தில் 2020 ம் ஆண்டு முதல் 2023 ம் ஆண்டு வரை தென்காசி மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டியில் உள்ள நிலத்தை நிறுவனத்தின் இயக்குநர்களின் கையெழுத்தை மோசடியாக போட்டு, நிறுவனத்தின் முத்திரைகளை மோசடியாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து சேர்மத்துரை சென்னை வில்லிவாக்கம் பழனி நகர் விரிவு இராஜாஜி நகரைச் சேர்ந்த ராமானுஜம் மகள் கஸ்தூரி என்பவருக்கு 5 ஏக்கரும், திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தாலுகா பூம்புகார் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வராகவன் என்பவருக்கு 6 ஏக்கரும் விற்பனை செய்துள்ளார்.
மேலும் கடையம் பெரும்பத்து கிராமத்தில் நிறுவனத்திற்குச் சொந்தமான 94 ஏக்கர் நிலத்தில் 22.25 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சேர்மத்துரை தனது சகோதரர் ராமசாமி என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நிலத்தை ராமசாமி சேர்மத்துரையின் இரண்டு மனைவிகளான ரெபேக்காள், செல்வி மற்றும் சேர்மத்துரையின் மகள் ஹெப்சிராணி ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்த மோசடிக்கு சேர்மத்துரையின் மற்றொரு சகோதரர் சக்தி கண்ணன் மற்றும் ஆலங்குளம் காந்தி நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சார்லஸ், ஆறுமுகம் மகன் முத்துக்குமார், கடையம் மாதாபுரம் ராஜசேகர் மகன் ஜோசப் பால்ராஜ், மதுரை வழக்கறிஞர் சிங்கார வடிவேல், ஆவுடையானூர் ராஜமணி மகன் அருள் செல்வன், முனைஞ்சிப்பட்டி தாமஸ் பாண்டியன் மகன் அமிர்தராஜ், பெத்தநாடார்பட்டி நாகல் குளம் செல்வராஜ் மகன் அமல்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
மோசடி செய்யப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும். இந்த மோசடி குறித்து தெரிய வந்த தனியார் நிறுவனம் சேர்மத்துரையை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. மேலும் சேர்மத்துரை நிலத்தை மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு திரும்ப நிலத்தை நிறுவனத்திற்கு ஒப்படைத்து விடுவதாகவும் மேலும் ரூ.66.05 லட்சத்திற்கு கடன் உறுதிமொழியும் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அதன்படி சேர்மத்துரை நடந்து கொள்ளாமல் நிறுவனத்தை ஏமாற்றி விட்டார்.
இதனால் இதுகுறித்து தனியார் நிறுவன மண்டல மேலாளர் சண்முகசுந்தரம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசனிடம் புகார் மனு கொடுத்தார். இதன் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி நில மோசடியில் ஈடுபட்ட சேர்மத்துரை உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி விசாரணை நடத்தி சேர்மத்துரை ஜோசப் பால்ராஜ், முத்துக்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய 13 பேர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.