தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
1 min read
Diwali festival: 48 thousand police in Tamil Nadu security
30.10.2024
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை வியாழக்கிழமை வருவதால், அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் சேர்த்து தொடர்ச்சியாக 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்திருக்கிறது.
இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்து பலரும் நேற்று முன்தினத்தில் இருந்தே பயணம் செய்ய தொடங்கிவிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றும் சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் பஸ்கள், ரெயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டு வருகின்றன.
இதேபோல், ரெயில்களிலும் நேற்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி 4 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள், சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட ரெயில்களில் அவர்களுக்கான முன்பதிவில் ஏறி பயணித்தனர். மேலும் சொந்த காரிலும் ஏராளமானோர் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் சுமார்1 லட்சம் பேர் பயணித்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று சுமார் 2.5 லட்சம் முதல் 4 லட்சம் பேர் பஸ்கள், ரெயில்கள், கார்களில் புறப்பட்டு சென்றதாக தெரியவருகிறது. தீபாவளியன்று ஊருக்கு செல்லும் வகையில், இன்றும் பலர் சென்னையில் இருந்து பயணிக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். பஸ்கள், ரெயில்களிலும் வழக்கம்போல் தீபாவளிக்கு முந்தையநாளான இன்றும் மக்கள் கூட்டம் இருக்கும்.இதனால் போக்குவரத்து நெரிசலுக்கும் பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.