ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min read
Jafar Sadiq case: CBI court orders action against Enforcement Directorate
19.11.2024
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து கடந்த ஜூன் 26ம் தேதி அவரை கைது செய்த நிலையில், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்-கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தசூழலில், ஜாபர் சாதிக் சகோதரர் முகம்மது சலீம், ஜாமீன் கோரி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட என்னிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யபட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு 13-வது கூடுதல் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக அமலாக்கத்துறை வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார்.