August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாமலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதல்-அமைச்சர் அறிவிப்பு

1 min read

Rs. 5 lakh to the families of those who died in Tiruvannamalai – Chief Minister’s announcement

3.12.2024
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் 2 குழந்தைகளின் உடல்களை இன்றுமீட்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் மண், பாறை சரிவால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது 01-12-2024 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் கனமழையின் காரணமாக மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது.
இதனையறிந்து மாவட்ட நிர்வாகத்தினரால் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படையின் கமாண்டர் உட்பட 39 வீரர்கள் நேற்று இரவு முதல் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று 02-12-2024 மாலை 6.30 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் துரதிஷ்டவசமாக அந்த வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா (வயது 27), மகன் கௌதம் (வயது-9), மகள் இனியா (வயது-5). பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகள் ரம்யா (வயது-7) மஞ்சுநாதன் என்பவரின் மகள் விநோதினி (வயது-14) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் மகா (வயது-7) ஆகிய ஏழு நபர்கள் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *