சங்கரன்கோவில்: இறந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் கைது
1 min read
Sankarankovil: Private ambulance driver and assistant arrested for stealing jewelry from a deceased woman’s body.
22.9.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நேற்று மாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த தங்கச் செயினை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் திருடிய நிலையில் அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நகைகளை மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள ஏ.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லக்கனி என்பவர், திருவேங்கடத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் கரிசல்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யாபுரத்தைச் சேர்ந்த கலா என்ற பெண் லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் செல்லக்கனி மற்றும் கலா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேங்கடம் காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மருத்துவமனைக்கு வந்த கலாவின் மகள் அவர் அணிந்திருந்த தங்கச் செயினை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் அவரது உதவியாளர் பூபதிராஜா ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கலாவின் கழுத்தில் இருந்த செயினை அவர்கள் இருவரும் திருடியது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த திருவேங்கடம் காவல் துறையினர், அவர்களிடம் இருந்து செயினை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.