ரெயிலில் கண்ணாயிரம் கலாட்டா/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Kannayiram Kalatta in the train/ Comedy story/ Tapasukumar
7.1.2025
கண்ணாயிரம் சென்னை செல்வதற்காக புதுவை ரெயில் நிலையத்தில் காத்து நின்றார். பாசஞ்சர் ரெயிலில் செல்ல டிக்கெட் எடுத்த அவர் எக்ஸ்ரெயிலில் ஏறினார். அங்கு பதிவு பயணச் சீட்டு எடுத்திருந்தவர்கள் அமர்ந்திருந்ததால் இடம் கிடைக்காமல் தடுமாறினார். அவர் அன் ரிசர்வ் டிக்கெட் எடுத்திருந்ததால் கடைசி பெட்டிக்கு நடந்து போங்கள் என்று ஒருவர் சொல்ல, கண்ணாயிரம் கடைசி பெட்டியை நோக்கி நடந்தார். அந்த பெட்டி முடிவடைந்து விட்டதால் சீட்டு கிடைக்குமா என்று பார்த்தபோது ஒருவர் கண்ணாயிரத்தைப் பார்த்து என்னய்யா வித்தவுட் டிக்கெட்டா என்று கேட்க கண்ணாயிரம் கால் சட்டைப் பையில் வைத்திருந்த டிக்கெட்டை எடுத்து.. தாம்பரம் டிக்கெட் என்று காட்டினார்.
அதைப் பார்த்தவர்.. யோவ்.. இது ரசர்வ் கம்பார்ட்மென்ட்.. நீ அன்ரிசர்வ் கம்பாட்மெண்டில் ஏறணும். மாத்தி ஏறிட்டிட்டியா.. விழுப்புரம் வந்தவுடன் ரெயில் ஐந்து நிமிடம் நிக்கும். அப்போது நீ இறங்கி கடைசியிலே இருக்கிற பெட்டியிலே ஏறிக்கோ சரியா என்றார்.
கண்ணாயிரம்.. ம்..ம் என்று தலையை ஆட்டினார். கடைசி நேரத்திலே வந்து டிக்கெட் எடுத்தா கடைசி பெட்டிக்குத்தான் போகணும் போலிருக்கு.. அடுத்த முறை அதிகாலையிலே வந்து டிக்கெட் எடுக்கணும். அப்பத்தான் முதல் பெட்டியிலே ஏறமுடியும். யாரும் இதைச் சொல்லாம விட்டுவிட்டாங்க.. ம்.. அடுத்த முறை பார்த்துக்கிறன்.. என்றபடி நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் விழுப்புரம் வர, ரெயில் நின்றது. அங்கிருந்தவர்.. யோவ், விழுப்புரம் வந்துட்டு இறங்கி கடைசி பெட்டியிலே சீக்கிரம் ஏறு.. ரெயில் போயிடும் என்க, கண்ணாயிரம் இரண்டு பையையும் தூக்கிக் கொண்டு இறங்கினரார்.
என்னய்யா பையை ஏத்துறதும் இறக்கிறதுமா இருக்கு..ஏற்கனவே ரெயிலில் ஏறும்போது வேட்டி போச்சு.. இப்போ..உஷாரா இருக்கணும்.. வேற வேட்டியும் இல்ல.. என்றபடி கடைசி பெட்டியை நோக்கி விரைந்தார். பாதி பேர் இறங்கி நின்றதால் கண்ணாயிரம் எளிதாக பையைத் தூக்கிக்கொண்டு கடைசி பெட்டியில் ஏறினார். உள்ளே சரியான கூட்டம்.. கண்ணாயிரம் விழித்தார். கால்வைக்கக் கூட இடம் இல்லையே.. என்று முணங்க.. அங்கே நின்ற ஒருவர் என்னய்யா கள்ளரெயில் ஏறி வர்ரீயா என்று கேட்க, கண்ணாயிரம்.. கோபமாக.. ரெயில் பெயர் உனக்கு வாசிக்கத் தெரியாதா.. கள்ளரெயில் என்று ஒன்றும் போடலையே.. வேறு ஏதோ ஒரு பெயர் அல்லவா போட்டிருந்தாங்க என்க, கேள்வி கேட்டவர்… யோவ்.. டிக்கெட் எடுக்காம வந்திட்டியான்னு கேட்டேன் என்று சொல்ல, கண்ணாயிரம்.. எத்தனை பேருதான் இப்படி கேட்பீங்க, இந்த கண்டக்டரை எங்கே…அவர்தான் டிக்கெட் எடுத்தாச்சான்னு கேட்கணும்..நீ ஏன்யா கேட்கிற என்று கேட்டார்.
அருகில் நின்றவர்..யோவ் ரெயிலில் கண்டக்டர் எல்லாம் கிடையாது.. டி.டி.ஆர்தான் உண்டு..அதோ கீழே நிக்கிறாரே அவர்தான் டி.டி.ஆர் என்று சொல்ல, கண்ணாயிரம் நம்பவில்லை. என்ன பொய் சொல்லுறீங்களா.. கீழே நிக்கிறவர் வெள்ளை சட்டை போட்டிருக்கிறாரு.. காக்கிச் சட்டைப் போடலையே என்று சொல்ல, அங்கு நின்றவர்.. யோவ்..ரெயிலில் டி.டி.ஆருக்கு வெள்ளை டிரஸ்தான்யா.. என்க கண்ணாயிரம், என்ன கதை வுடுறீயளா…ரெயிலில் வெள்ளை டிரஸ் கொடுத்தா.. ரெயில் புகைவிடும் போது கரியாகிடாதா…. என்று சொல்ல, அங்கு நின்றவருக்கு தலை சுற்றியது.
இது எலக்டிரிக் ரெயில் ..புகை எல்லாம் வராது.. புரியுதா என்று கேட்க, கண்ணாயிரம் என்னயா சொல்லுற.. இது தாம்பரம் ரெயிலுன்னுதானே ஏறினேன்.. நீ என்னடான்னா எலக்ட்ரிக் ரெயிலு என்கிற.. என்று சொல்ல அருகில் நின்றவர் தலையில் அடித்துக்கொண்டார்.
யோவ் இது தாம்பரத்துக்குப் போற ரெயிலுதான்.. ஆனா இது எலக்ட்ரிக்ல ஓடுற ரெயிலு என்று சொல்ல, கண்ணாயிரம்,..ஏங்க கரண்ட் கட்டானா இடையிலே ரெயில் நின்னுடுமே.. நான் என்ன பண்ணுவேன் என்று அழ, அருகில் நின்றவர்.. யோவ் அழாதய்யா..அப்படியெல்லாம் ரெயிலில் கரண்கட்டாகாது.. அதுபாட்டுக்கு கரண்டு வந்துக்கிட்டே இருக்கும் என்க, கண்ணாயிரம் பதட்டமானார்.
ஏங்க நிக்காம கரண்டு வந்துக்கிட்டே இருந்தா.. கரண்டுபில் எகிறிடுமே.. யார் கரண்டு பில் கட்டுவா.. என்று கேட்டார்.
அங்கு நின்றவர்.. அதோ கீழே நிக்கிறாரே டி.டி.ஆர் அவர்தான் கட்டுவார். ஆளைவிடு என்றார்.
கண்ணாயிரம் விடுவாரா.. யோவ்.. நான் டிக்கெட் எடுத்துட்டு வந்திருக்கேன்.. எனக்கு உட்கார இடம் எங்கே என்று கேட்க, அதற்கு அவர் ஓ.. டிக்கெட் எடுத்துருக்கியா.. அதோ பூட்டிக் கிடக்க.. அந்த அறையை திறந்துக்கிட்டுப்போ.. என்க கண்ணாயிரம் அந்த அறையை நோக்கி நடந்தார்.
சத்தம்போட்டாதான் கதை நடக்குது.. டிக்கெட் எடுத்தா சீட்டு ஒதுக்காம இருப்பாங்களா.. என்றபடி வேகமாக நடந்தார்.
பூட்டிக்கிடந்த அறையை நெருங்கியதும் வாடை வீசியது. ம்.. உள்ளே நல்லா இருக்கும் என்றபடி கதவை தட்டினார். என்ன யாரோ கதை பூட்டிக்கிட்டு உள்ளே இருக்கிறமாதிரி தெரியுது. யோவ்..டிக்கெட் எடுத்தவன் வந்திருக்கேன்.. கதவை திறய்யா என்று கண்ணாயிரம் கதவை ஓங்கித் தட்டினார்.
உள்ளிருந்து ஒருவர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். யாருய்யா அது நிம்மதியா ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவிடாம கத்துறது என்றார்.
இங்கே உக்காருவதற்கு டிக்கெட் எடுத்தேன் என்று கண்ணாயிரம் சொல்ல, சொன்னவன் யாருய்யா.. ரெயில் கக்கூசுக்கு டிக்கட் எடுத்தவன் யாருய்யா என்று கேட்க, கண்ணாயிரம்..நான்தானுங்க..உள்ளே ஒரே கூட்டமா இருக்கு.. இந்த ரூம்பில் தங்கலாமுன்னு சொன்னாங்க என்று இழுக்க பாத்ரூமில் இருந்து வந்தவர்..ஆ..நானே வயிறு வலிக்குதுன்னு இருக்கேன். நீ வேற வலியை அதிகமாக்குற..போய்யா அங்கே போய் இரு.. இது ஒண்ணுக்கு ரெண்டுக்கு போற இடம்.. போயி ஓரமாக இரு என்று கத்தினார்.
கண்ணாயிரம்..என்னடா கூத்தா இருக்கு..டிக்கெட் எடுத்தாலும் சீட் கிடையாதுங்கிறாங்க..கண்டக்டர் வரட்டும். இரண்டில் ஒன்று பாத்திடவேண்டியதுதான் என்றபடி ஓரத்தில் போய் உட்கார்ந்தார். ரெயில் புறப்பட்டது.
அப்போது டி.டி.ஆர் கீழே நின்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த கண்ணாயிரம்.. அய்யய்யோ கண்டக்டர் ரெயிலில் ஏறலை. அதுக்குள்ளே ரெயிலை எடுத்துட்டாங்க.. நிப்பாட்டுங்க.. நிப்பாட்டுங்க என்று கத்தினார். கூட்டம் உள்ளே ஏறியது. கண்ணாயிரம் சொல்வதைக் கேட்டு சிரித்தபடி, யோவ் கத்ததாய்யா.. அவரு அடுத்த ரெயிலில் வருவாரு.. என்க, கண்ணாயிரம்..அது எப்படிங்க.. நான் டிக்கெட் எடுத்திருக்கேன்.. எனக்கு இருக்க இடமில்லையே.. கண்டக்டர் வரலைன்னா. ரெயிலு நிக்க யாரு விசில் ஊதுவா? நான் சீட்ட யாரிடம் கேட்பேன் என்க, அங்கு நின்ற வாலிபர், யோவ்,டிக்கெட் எடுக்காத நாங்களே அமைதியா வர்ரோம்.. நீ ஏன்யா டிக்கெட் எடுத்துட்டு வந்து கத்துற.. அமைதியாக இரு.. இன்னா பிஸ்கட் சாப்பிடு என்று பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினான்.
அடா..கண்ணாயிரம் உஷாரா இரு..ரெயிலில் யார் பிஸ்கட் கொடுத்தாலும் சாப்பிடக்கூடாது என்று பூங்கொடி சொல்லியிருக்கா. இவன் நம்ம பையை ஆட்டையைப் போடப் பாக்கிறான் என்று நினைத்தார்.
அந்த வாலிபரிடம்..வேண்டாம்.. பிஸ்கட் சாப்பிடுற பழக்கம் இல்லை என்று சொன்னார்.
அதற்கு அந்த வாலிபர், அப்படியா கூல்டிங்ஸ் குடிங்க என்க கண்ணாயிரம்.. அடியோ. ஆபத்து வந்துட்டு. .நம்மளை மயக்கி ரூபாயை புடுங்கப் பாக்கிறான். விடப்படாது என்றவாறு கண்ணாயிரம் பதில் சொல்லாமல் இருந்தார்.
வாலிபர் விடவில்லை. யோவ்.. பைக்குள்ளே என்ன.. பாக்கெட் சாராயமா என்று கேட்க, கண்ணாயிரம்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. தண்ணீர் என்றார்.
வாலிபர் உடனே தண்ணியா.. தண்ணீரா என்று கேட்க, கண்ணாயிரம்..ஏய்.. என்னை துளைச்சு துளைச்சு கேட்காதே.. நான் உளறிப்புடுவேன் என்க..வாலிபர் உற்சாகமானார்.
நீங்க உளறுங்க என்க கண்ணாயிரம்.. இது என்ன வம்பா போச்சு.. இங்கே ஒரே நாத்தமாக வேற இருக்கு. இருக்க முடியல என்றவர் ஓ..என்று வாயைப் பிளந்தார்.
வாமிட் எடுத்ததில் சாப்பிட்டதில் பாதி வெளியே வந்து விட்டது. கண்ணாயிரத்தை நெருக்கிக் கொண்டு நின்றவர்கள் சிதறி ஓடினார்கள். கண்ணாயிரம் தனியாக நின்றார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.