கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி: பொதுநல வழக்கு
1 min read
30 people killed in Kumbh Mela stampede: Public interest litigation seeks action against officials
30/1/2025
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் அமாவாசையை ஒட்டி புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். அதில் 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று போலீஸ் டிஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இதில் காயமடைந்த 60 பேரில், 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிறிய சிகிச்சைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார். பலியான 30 பேரில் 4 பேர் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் வடகோன் பகுதியை சேர்ந்த ஜோதி ஹத்தார்வாட் (வயது 50), அவருடைய மகள் மேகா ஹத்தார்வாட் (16), மகாதேவி பகனூர் மற்றும் அருண் பகனூர் ஆகிய 4 பேரும் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுடன் சென்ற மேலும் 9 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்து, நாடு முழுவதும் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம்கோர்ட்டில், பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த பொதுநல மனுவில், “யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த அடிப்படை தகவல்களை வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் பிரயாக்ராஜில் உள்ள வசதி மையங்களுக்கு உத்தரவிட வேண்டும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல், எளிதாக உதவி பெறக்கூடிய வகையில், அறிவிப்புகள், திசையைக் காட்டும் பலகைகள், சாலைகள் போன்றவற்றை பிற மொழிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
உத்தரபிரதேச அரசின் ஒருங்கிணைப்புடன் கூடிய அனைத்து மாநில அரசுகளும் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட அதன் சிறிய மருத்துவக் குழுவை நியமிக்க வேண்டும், இதனால் மருத்துவ அவசரநிலை ஏற்படும் போது மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்படக்கூடாது.
ஜனவரி 29, 2025 அன்று நடந்த மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சம்பவம் குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரபிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.