குமாரபாளையம் ஜல்லிக்கட்டு: தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் சாவு
1 min read
Kumarpalayam Jallikattu: Youth dies after being stabbed in the throat by a cow horn
2.2.2025
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று 9-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு வளையக்காரனூர் காவேரி உயர் தொழில்நுட்ப பூங்கா முன்பு உள்ள மைதானத்தில் நடந்தது. திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தலைமை தாங்கினார். ஜல்லிக்கட்டை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகி ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 540 காளைகள் கலந்து கொண்டன. சுமார் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 80 வீரர்கள் வீதம் 5 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை துள்ளிப்பாய்ந்து மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில அடங்காத காளைகள் தன்னை அடக்க வந்த காளையர்களை ஆவேசமாக தூக்கி வீசின.
அதேநேரம் சில முரட்டு காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசு, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. கடைசி சுற்று போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது.
அப்போது சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (வயது 24) என்பவர் மாடுபிடி வீரராக களம் இறங்கினார். இவர் வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக வெளியே வந்த முரட்டு காளையை அடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தாமஸ் ஆல்வா எடிசனின் தொண்டை பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி கிழித்தது. இதனால் அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தாமஸ் ஆல்வா எடிசன் பரிதாபமாக உயிரிழந்தார். காளை குத்தியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.