நீட் தேர்வு: சட்டையால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவ-மாணவிக்கு கிடைத்த உதவி
1 min read
NEET Exam: Help received by student who was denied admission due to shirt
4.5.2025
நாடு முழுவதும் 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். சென்னையில் மட்டும் 44 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தனர். சென்னையில் தேர்வு எழுத மட்டும் 21,960 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதற்கிடையில் திருப்பூரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததாக கூறி, தேர்வு மைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால் கலக்கமடைந்த மாணவி செய்வதறியாது தவித்துள்ளார். அப்போது தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் போலீசார் உடனடியாக மாணவியை இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச் சென்று புதிய உடை வாங்கிக் கொடுத்தனர்.
அந்த உடையை அணிந்து கொண்டு மாணவி மீண்டும் தேர்வு மையத்திற்கு வந்தார். பின்னர் சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அந்த மாணவியை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி செய்த பெண் போலீசாரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. 
இதேபோல் மாணவர் ஒருவருக்கு அவர் அணிந்திருந்த சட்டை தடையாக இருந்தது.
நீட் எழுதவந்த மாணவர் ஒருவர் முழுக்கை டீசர்ட்டுடன் வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் அறிவுறுத்தலுக்கு பின் அவரின் அப்பா அணித்திருந்த அரைக்கை டீசர்ட்டை மாற்றிக் கொண்ட பின் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது.