தென்பெண்ணையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
1 min read
Flood warning issued for residents along the banks of the Thenpenna River
20.5.2025
கர்நாடகா மாநிலம், மைசூரு மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 1449 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து ரசாயன நுரையுடன் தண்ணீர் வெளியேறியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இந்த நுரை அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு மூடியது. இதனால் அப்பகுதி வழியாக கிராம பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இதனால் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக எட்டி உள்ளது.
இன்று காலை அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து சீறிப்பாய்ந்த வெள்ளம் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அணைக்கு செல்லும் பாதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
இதனால் பூங்கா, அணையை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
119 கனஅடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.