சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்
1 min read
Akash Bhaskaran fails to appear despite being summoned
21.5.2025
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி சோதனை நடத்தினர். இதன்படி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
முன்னதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில் டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகவில்லை.
முன்னதாக டாஸ்மாக் முறைகேடு வழக்கில் விசாரணை வளையத்திற்குள் ஆகாஷ் பாஸ்கரன் கொண்டு வரப்பட்டநிலையில், டான் பிக்சர்ஸ் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரன் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஆகாஷ் பாஸ்கரன் நேற்று நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகாத நிலையில், அவர் எங்கு உள்ளார்? என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.