July 16, 2025

Seithi Saral

Tamil News Channel

குஜராத்தில் ஏர்-இந்தியா விமானம் விழுந்து தீப்பிடித்தது- 242 பேர் கதி என்ன?

1 min read

Air India plane crashes and catches fire in Gujarat – what happened to 242 people?

12.6.2025
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

அந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ‘ஏர் இந்தியா’ நிறுவனம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், இதை விபத்து என்று குறிப்பிடாமல் ‘சம்பவம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இது விபத்தா? அல்லது சதி செயலா? என்ற சந்தேகம் கிளம்பியது. இந்த நிலையில், மற்றொரு பதிவு மூலம் இது ஒரு விபத்து என்பதை ‘ஏர் இந்தியா’ உறுதி செய்துள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI171 விமானம் இன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது என்பதை ‘ஏர் இந்தியா’ உறுதி செய்கிறது.

அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில், பயணிகள், விமான பணியாளர்கள் உள்பட மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களை பெற 1800 5691 444 என்ற பயணிகளுக்கான பிரத்யேக அவசர எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ‘ஏர் இந்தியா’ முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக அகமகதாபாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து செய்தியை கேட்டு வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விபத்தில் சிக்கியவர்களுடன் என் மனது உள்ளது. மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்தை அடுத்து உள்துறை மந்திரி அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். விமான விபத்து குறித்து குஜராத் அதிகாரிகளிடம் அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். அத்துடன், மீட்புப்பணிகள், சிகிச்சைகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அமித்ஷா அகமதாபாத் விரைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *