ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு; சென்னை பக்தர் பலி
1 min read
Landslide in Jammu and Kashmir; Chennai devotee dies
22.7.2025
ஜம்மு-காஷ்மீர் ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. கத்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் 184.2 மி.மீ. பலத்த மழை கொட்டித் தீர்த்த நிலையில், வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் பழைய வழித்தடத்தின் தொடக்கப் பகுதியான பான்கங்கா என்ற இடத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
யாத்திரை தொடங்குமிடம் என்பதால், பக்தர்கள் மட்டுமன்றி கோவேறு கழுதைகள் மூலம் அவர்களை அழைத்துச் செல்லும் பணியாளர்களும் கூடியிருந்தனர். நிலச்சரிவில் இப்பணியாளர்களின் பதிவு அலுவலகமும், இரும்பு கட்டுமானங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்த பக்தர் உப்பன் ஸ்ரீவாஸ்தவா (70), அவரது மனைவி ராதா (66), அரியாணாவைச் சேர்ந்த ராஜீந்தர் பல்லா (70) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஸ்ரீவாஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிலச்சரிவைத் தொடர்ந்து, வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் உதவியுடன் மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று கோவில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் குமார் வைஷியா தெரிவித்தார்.
நிலச்சரிவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஜம்மு-காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோவில் வாரியத்துக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
இக்கோவிலுக்கு செல்லும் புதிய வழித்தடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.