August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Supreme Court orders details of 65 lakh voters deleted in Bihar

7.8.2025
பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 9-ந்தேதிக்குள் அளிக்குமாறு பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.

சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.

அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும், அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜால் புயன், கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. மனுதாரரான ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும், நீக்கத்துக்கான காரணத்தையும் வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி புதிய மனு தாக்கல் செய்தது.

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் வக்கீல் பிரசாந்த் பூஷணிடம் நீதிபதிகள், ‘‘தற்போது வரைவு பட்டியல் மட்டுமே வெளியாகி உள்ளது. நீக்கத்துக்கான காரணம் பின்னர் தெரிய வரும்’’ என்று கூறினர். அதற்கு பிரசாந்த் பூஷண், ‘‘நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியல், அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்காளர்கள் இறந்து விட்டனரா அல்லது இடம்பெயர்ந்து விட்டனரா என்று அதில் விளக்கம் அளிக்கப்படவில்லை’’ என்று கூறினார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதிகள், “நீக்கப்பட்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்களை 9-ந்தேதிக்குள் தேர்தல் கமிஷன் சமர்ப்பிக்க வேண்டும். அதன் நகலை ஜனநாயக சீர்திருத்த சங்கத்திடம் அளிக்க வேண்டும். அதை பிரசாந்த் பூஷண் பார்க்கட்டும். என்ன சேர்க்கப்பட்டுள்ளது, என்ன சேர்க்கப்படவில்லை என்று பிறகு பார்ப்போம்” என்று தெரிவித்தனர்.

வக்கீல் பிரசாந்த் பூஷண், ‘‘கணக்கீட்டு படிவம் அளித்த வாக்காளர்களில் 75 சதவீதம்பேர், 11 ஆவணங்களில் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் அவர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களின் பரிந்துரையுடன் வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன’’ என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘‘ஆகஸ்டு 12-ந்தேதி விசாரணை தொடங்குகிறது. அப்போது, நீங்கள் குற்றச்சாட்டுகளை கூறலாம்’’ என்று கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *