June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய இளைஞர்கள் சொந்தமாக சமூக ஊடகத்தை உருவாக்க மோடி வேண்டுகோள்

1 min read

Modi urges Indian youth to create their own social media

15.8.2025
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.

செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கூறும்போது, “இந்திய மக்கள் ஏன் வெளிநாடுகளின் சமூக ஊடகங்களை நம்பியிருக்க வேண்டும்? இந்தியர்களின் பணம் ஏன் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். இந்திய இளைஞர்கள் சொந்தமாக இந்திய மக்களுக்காக சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் கூறியதாவது:-

இந்திய சுதந்திரத்தில் பெண்களின் சக்திக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இன்று சிறப்புவாய்ந்த நாள். இன்று, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, ஆபரேஷன் சிந்தூரின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

நமது துணிச்சலான வீரர்கள் எதிரிகளை அதன் கற்பனைக்கு எட்டாத வகையில் தண்டித்தார்கள். ஏப்ரல் 22 ஆம் தேதி, எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் பஹல்காமிற்கு வந்து, அவர்களின் மதத்தைக் கேட்ட பிறகு மக்களைக் கொன்றனர்.

முழு இந்தியாவும் சீற்றமடைந்தது, அத்தகைய படுகொலையால் முழு உலகமும் அதிர்ச்சியடைந்தது. ஆபரேஷன் சிந்தூர் என்பது அந்த சீற்றத்தின் வெளிப்பாடாகும். 22 ஆம் தேதிக்குப் பிறகு, நமது ஆயுதப் படைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம். அவர்கள் உத்தி, இலக்கு மற்றும் நேரத்தை தீர்மானிக்கிறார்கள். பல தசாப்தங்களாக செய்யப்படாததை நமது படைகள் செய்தன.

நாங்கள் எதிரி மண்ணுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம்… பாகிஸ்தானில் அழிவு மிகப் பெரியது. ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். 10 ஆண்டுகளாக நடக்காத ஒன்றை நமது ராணுவம் நடத்திக் காட்டியது.

பஹல்காமில் அப்பாவி மக்களின் மதத்தை கேட்டு கொன்ற பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா எப்போதும் அஞ்சாது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் புதிய இயல்பை பிரதிபலிக்கிறது.

நாம் இப்போது ஒரு புதிய இயல்பை உருவாக்கியுள்ளோம். எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கு எப்போது தாக்குதல் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும்.

சிந்து நதி நீரை முழுமையாக பயன்படுத்தும் உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே உள்ளது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.எதிரி நாட்டு விவசாய நிலங்களுக்கு நமது தண்ணீர் கிடைக்க கூடாது. அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம்

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *