June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியீடு

1 min read

Details of 65 lakh people removed from voter list in Bihar released

18.8.2025

பீகாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும். அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாய சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வார தொடக்கத்தில் இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த் தேர்தல் ஆணையம், சட்டப்படி, நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தது. இதனையடுத்து, பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதுதொடர்பான அறிக்கையை 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினர்.

மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும், ஆதார் கார்டுகள், EPIC நம்பர்களை செல்லுபடியாகும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் ஆதாரத்துடன் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *