August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு:சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை

1 min read

Case against Minister I. Periyasamy: Chennai High Court orders interim stay

18.8.2025
அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி சுசீஸா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஐகோர்ட்டு, கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. அதில், ”குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த வழக்கை திண்டுக்கல் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால், தினந்தோறும் என்ற அடிப்படையில், வழக்கை விசாரித்து 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்.” என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐ.பெரியசாமி தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும் படி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டடுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *