June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்

1 min read

Flag hoisting ceremony of Avani Moolathiruvizha at Nellaiappar Temple

24.8.2025
நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவானது, நெல்லையப்பருக்கு கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாப விமோசனம் பெற்ற வரலாற்று நிகழ்வு தொடர்புடைய விழா ஆகும்.

அதாவது கருவூர் சித்தர், சிவன் கோவில்களுக்கு சென்று நல்வரங்களை கேட்டு பெற்றார். இவ்வாறு நெல்லைக்கு வந்து சேர்ந்த கருவூர் சித்தர், நெல்லையப்பரை தரிசிக்க வந்தபோது நெல்லையப்பா என்று அழைத்தார். ஆனால் நெல்லையப்பரிடம் இருந்து மறுமொழி கிடைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கருவூர் சித்தர் சாபமிட்டு விட்டு மானூருக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து நெல்லையப்பர் ஆவணி மூல நாளில் மானூருக்கு சென்று சித்தருக்கு காட்சி கொடுத்தார். இந்த வரலாற்றுக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் 4-வது நாளான வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது.

வருகிற 31-ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 1-ந் தேதி இரவு 1 மணி அளவில் சந்திரசேகரர் சுவாமி, பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகத்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கு, சப்பரங்களில் 4 ரதவீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

அங்குள்ள அம்பலவாண சுவாமி கோவிலில் 2-ந் தேதி காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்து சாபவிமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரலாற்று புகழ் மிக்க ஆவணி மூலம் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *