June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min read

Expansion of breakfast scheme in urban government-aided schools: MK Stalin launches

27.8.2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் காலை உணவை உண்டு கல்வி பயின்று வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்.

இதில் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்தினர். இந்த திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *