டி.ஜி.பி. நியமன விவகாரம்: அண்ணாமலை கண்டனம்
1 min read
DGP Appointment Issue: Annamalai Condemns
31.8.2025
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு, மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. சங்கர் ஜிவாலைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும்.
ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.
காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.