June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

‘இந்தியா-சீனா ஒத்துழைப்பு மனிதகுலத்தின் நலனுக்கு வழி வகுக்கும்’- பிரதமர் மோடி பேச்சு

1 min read

‘India-China cooperation will pave the way for the welfare of humanity’ – Prime Minister Modi’s speech31/8/2025

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன. இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு இன்று தொடங்கியது. நாளையும் மாநாடு நடைபெறும்.
இன்று சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை பிரச்சினை, அமெரிக்க வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஜின்பிங், “சீனாவும், இந்தியாவும் பழம்பெரும் நாகரிகங்களைக் கொண்ட கிழக்கத்திய நாடுகள். நாம் சிறந்த அண்டை நாட்டு நட்புறவுகளைக் கொண்ட நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியை பெற வைக்கும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும். டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது சீன அதிபர் இவ்வாறு பேசியிருப்பது அமெரிக்காவுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த ஆண்டு ரஷியாவின் கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற சந்திப்பில், இந்தியா-சீனா இடையிலான உறவுகளை நேர்மறையான திசையில் கொண்டு செல்வது குறித்து பேசப்பட்டது. எல்லையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா எல்லை மேலாண்மை தொடர்பாக எங்கள் சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுகின்றன.

இரு நாடுகளையும் சேர்ந்த 280 கோடி மக்களின் நலன்கள் நமது ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா-சீனா ஒத்துழைப்பு மனிதகுலத்தின் நலனுக்கு வழி வகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெற்றிகரமான தலைவராக சீனா பொறுப்பேற்றதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சீனாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்ததற்கும் இன்று நடைபெற்ற சந்திப்புக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *