தென்காசி மாவட்டத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க 30 சதவீதம் மானியம்
1 min read
30 percent subsidy for setting up a farmer welfare service center in Tenkasi district
3.9.2025
தென்காசி மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.என்று தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செ.அமலா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் நலன் காத்திடும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு மாநில திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் எனும் திட்டமானது 2025-26 ஆம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு முடித்த இளைஞர்களின் பட்டறிவும் தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் 1000 எண்கள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப் படவுள்ளது.
இதில் ரூபாய் 10 இலட்சம் முதல் ரூபாய் 20 இலட்சம் மதிப்பிலான உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட 30 சதவிகிதம் மானியமாக ரூபாய் 3 இலட்சம் முதல் ரூபாய் 6 இலட்சம் வரை வழங்கப்படும். இதற்கென மாநில நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியை பெருக்கவும் பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆலோசனை ஆகியவை வழங்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை. தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் முதல்வரின் உழவர் நல சேவை மையம் தென்காசி மாவட்டத்திற்கு ரூபாய் 10 இலட்சம் முதலீட்டில் 7 எண்ணம் மற்றும் ரூபாய் 20 இலட்சம் முதலீட்டில் 3 எண்ணம் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது.
இதில் ரூபாய் 10 இலட்சம் முதலீட்டில் அமைக்கப்படும் உழவர் நல சேவை மையத்திற்கு மானியமாக ரூபாய் 3 இலட்சமும், ரூபாய் 20 இலட்சம் முதலீட்டில் அமைக்கப்படும் உழவர் நல சேவை மையத்திற்கு மானியமாக ரூபாய் 6 இலட்சமும் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கான மூலதன மானியம் 30 சதவீதமாகும். இதில் அதிகபட்சமாக வழங்கப்படும் மானியம் ரூபாய் 6 இலட்சம் ஆகும். வேளாண்மை உழவர் நலத்துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மைய பயனாளிகளுக்கு வழங்கப்படும். பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை நேரடியாக வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் 30 சதவீத பயனாளிகள் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட,பழங்குடியினராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி கடன் ஒப்புதல் https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register எடமுகவரியில் உரிய ஆவணங்களை செலுத்தி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் மாநில அரசின் உதவியுடன் தொடங்கப் படுவதால் இந்த அரிய வாய்ப்பினை தென்காசி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த பட்டதாரிகள் / பட்டயதாரிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதுதொடர்பான விபரங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இவ்வர்று தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செ.அமலா தெரிவித்துள்ளார்.