August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

1 min read

Edappadi Palaniswami urges release of white paper on foreign investments

9.9.2025
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

“2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு, தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம். 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி, மக்களின் காதுகளில் பூச்சூடி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு, சதவீத கணக்கில் 70 சதவீதம் என்றும், 77 சதவீதம் என்றும் முதலீடுகளை ஈர்த்தது பற்றி முதலமைச்சர் ஸ்டாலினும், தொழில்துறை அமைச்சரும் முதலீடு வந்துவிட்டது போலவும், வேலை வாய்ப்பு இலட்சக் கணக்கில் உருவாகிவிட்டது போலவும் (எக்ஸ் வலைதள) அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

2022, மார்ச் 24 முதல் 29 வரை துபாய்க்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோபல் ஸ்டீல் 1,000 கோடி, லூலூ மால் 3,500 கோடி, ட்ரான்ஸ்வோல்ட், வைட்ஹவுஸ் மற்றும் ஆஸ்டர்டாம் ஹெல்த் கேர் என்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு என்று அறிக்கை வெளியிட்டார்கள். இதன்படி ஆறு நிறுவனங்களும் தொழிலை ஆரம்பித்துவிட்டனவா? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன?- யாருக்கும் தெரியாது.

இரண்டாவதாக, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டு 3,233 கோடி ரூபாய் முதலீடு பெற்று, 5000 வேலைவாய்ப்பை உருவாக்கப் போட்ட 13 ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன? யாருக்கும் தெரியாது.

மூன்றாவதாக, ஸ்பெயினுக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 7 வரை சென்று 3,440 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தோம் என்றும் கூறினார்கள். அந்த முதலீட்டில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன? – யாருக்கும் தெரியாது.

4-ம் முறையாக 2024, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 12 வரை 17 நாட்கள் அமெரிக்காவுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 11,516 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7,618 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக போடப்பட்டு அறிக்கை வெளியிட்டார்கள். எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது ? முழு விவரம் என்ன? யாருக்கும் தெரியாது.

தற்போது ஸ்டாலின், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஐந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 17,613 வேலைவாய்ப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இவைகளெல்லாம், இவர்களின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் விவரங்கள்தான்.

இதைத் தவிர, உலக முதலீட்டாளர் மாநாடு 2024, ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அதன்மூலம் 14.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 9.74 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து 27 தொழிற்சாலைகள் தொடங்கி 31 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.

ஸ்டாலின், ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தற்போது அறிவித்துள்ள நிறுவனங்களில் பல ஏற்கெனவே தமிழகத்தில் தங்களது தொழில்களை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இங்கே நடைபெற்று வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று கையொப்பம் வாங்கியதற்கு பதிலாக, இங்கேயே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கலாமே என்று தொழில் துறையினர் கூறுகின்றனர். இதில் 2021-க்கு முன்பு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட முதலீடுகளையும், திமுக தனது சாதனையாகக் கூறிக்கொள்வதுதான் விந்தை. எனவேதான், நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.

திமுக ஆட்சியின் முதலீடுகளின் நிலை பற்றி ஏன் அறிக்கையாக வெளியிடுவதில்லை ? குறைந்தபட்சம் சட்டமன்றத்தில்கூட இதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லையே ஏன் ? இந்த மொத்த விவரங்கள் கூட இவர்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியிடும் செய்தியில் இருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

மத்திய அரசு வெளிநாட்டு மூலதனம் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் 2022-23-ல் தமிழ் நாடு பெற்ற அந்நிய முதலீடு வெறும் 17,247 கோடி ரூபாய் என்றும், 2023-24ல் 20,157 கோடி ரூபாய் என்றும், 2024-25-ல் 31,103 கோடி ரூபாய் தான் என்றும், ஆகமொத்தம் 3 ஆண்டுகளில் 2025 மார்ச் மாதம் வரை 68,507 கோடி ரூபாய் மட்டுமே மூலதனமாகப் பெற்று, ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது. தமிழ் நாட்டை விட பல மடங்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் எல்லாம் பெற்றுள்ளன. டெல்லியும், தமிழகத்தை விட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ் நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?

அப்படியென்றால், திமுக அரசு கொடுக்கும் புள்ளி விபரம் ஒரு கற்பனையான புள்ளி விவரமா? என்று பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதில், விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உருவாக்கப்பட்ட 32.81 லட்சம் வேலைவாய்ப்புகள் எங்கே உருவாக்கப்பட்டுள்ளது என்று படித்து முடித்து வேலை தேடி அலைந்துகொண்டிருக்கும் வேலையில்லா இளைஞர் பட்டாளம் எழுப்பும் கேள்வியிலேயே அந்த பதில் உள்ளது. இளைஞர் பட்டாளம் எழுப்பும் கேள்வியிலேயே அந்த பதில் உள்ளது.

ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது ? எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்? எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன ? எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன ? என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழ் நாடு முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை ? அதை விட்டுவிட்டு எக்ஸ் தனி வலைதளத்தில் தொழில்துறை மந்திரியும், முதலமைச்சரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.

எனவேதான் ஸ்டாலினிடம், உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன். இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வெற்று விளம்பர முதலமைச்சர் . ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *