August 31, 2026

Seithi Saral

Tamil News Channel

ஓசூரில் ரூ.24,307 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

1 min read

Investors’ conference in Hosur: MoU worth Rs. 24,307 crore signed in the presence of the Chief Minister

11.9.2025
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 23,303.15 கோடி ரூபாய் முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 1003.85 கோடி ரூபாய் முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆக மொத்தம், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 3 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, 1210 கோடி ரூபாய் முதலீட்டில் 7900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், நான்கு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஜெர்மனி, லண்டன் போன்ற ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீட்டோடு தமிழ்நாட்டுக்கு திரும்பிய 3 நாளில் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் போய் விட்டு வந்த பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள். இன்றைக்கு இங்கு ரூ.26 ஆயிரம் கோடி முதலீடுகள் கையெழுத்தாகி உள்ளது. நம்மோட சாதனையை நாம்தான் முறியடித்து வருகிறோம். அது மட்டுமல்ல 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 1,600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறோம்.

ஓசூர், திறமையும் புதுமையும் சந்திக்கிற நகரமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வரைபடத்தில், தனித்த அடையாளம் பெற்ற நகரம் ஓசூர். வளர்ச்சியின் முகம்.

இந்தியாவை கடந்து உலகத்தை ஈர்க்கும் நகரகமாக ஓசூர் ஒளி வீசுகிறது. அப்படிப்பட்ட ஓசூரில் தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் எல்லோரையும் வரவேற்கிறேன்.

தமிழ்நாடு தொழில்துறையில், இவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்றால், அதுக்கு முக்கிய காரணம் துடிப்பான, இளமையான அமைச்சராக இருக்கக்கூடிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, போன மாதம் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனத்தை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன்.

இன்றைக்கு ஓசூரில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, மாலை டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நியூ டெல்டா ஸ்பாட் உற்பத்தி மையத்தை திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறேன். அடுத்து வர இருக்கக்கூடிய மாதங்களுக்கும் ‘டார்க்கெட்’ கொடுத்திருக்கிறேன்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நாங்கள் 2030-க்குள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிவு செய்தோம். அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் அதற்கு தொழில் வளர்ச்சி தான் அடிப்படை.

அதனால்தான் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மிகவும் சிறப்பான வகையில் உருவாக்கி, அவற்றை மேலும் மேலும் மேம்படுத்தி அது மூலமாக தொழில் செய்யக்கூடிய சூழலை வலுப்படுத்துகிறோம்.

அதனால்தான் தமிழ்நாட் டில் பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் எங்கேயும் இல்லாத வகையில் 11.19 சதவீதத்தை தொட்டுள்ளது. இந்த வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தான் முதலீட்டாளர்கள் மாநாடுகளையும், முதலீட்டாளர்களிடம் சந்திப்புகளையும் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறோம்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டை பற்றி, தெரிந்து கொண்டு முதலீட்டாளர்கள், ஆர்வமாக வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் தொழில் துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்திக்கும்போது நான் சொல்வது ஒன்றுதான்.

அது என்னவென்றால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதுதான். மகிழ்ச்சியாக சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கையெழுத்திட்ட வகையில் 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. எங்களுடைய குறிக்கோள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும. அதைத்தான் செய்து காட்டிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் தொழில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஓசூர் பார்த்துக் கொண்டு வருகிறது.

ஓசூர் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான புதிய தொழிற்சாலைகளை இந்த 4 ஆண்டு காலத்தில் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு காலத்தில், சிறிய தொழில் நகரம் என சொல்லப்பட்ட ஓசூர் இன்று வளர்ச்சி அடைந்து பல தொழிற்சாலைகள் வரும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதாவது நாட்டின் தொழில் வளர்ச்சி முகமாக ஓசூர் மாறி உள்ளது.

இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் ஓசூருக்கும் தமிழ்நாடு அரசு என்னென்ன செய்துள்ளது என்றால், முதலில் இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

ஓசூர் தொழில் வளர்ச்சிக்காக நாம் செய்ததில் முக்கியமானது சிப்காட் தொழிற்பூங்கா. 2092 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஓசூர் சிப்காட்டில் 371 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

2-வது சிறப்பான உள்கட்டமைப்போடு அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பூங்காவில் தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க டி.டி.ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3-வதாக சொல்ல வேண்டும் என்றால் சிப்காட் நிறுவனம் ‘போர்ட் இங்குபேட்டர்’ அமைத்து உள்ளது.

4-வது சூளகிரி பகுதியில் 689 ஏக்கரில் ஒரு தொழிற்பூங்கா. 5-வது பர்கூரில் 1379 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் கூடிய தொழிற்பூங்கா.

6-வது குருவரப்பள்ளியில் 150 ஏக்கரில் தொழில் பூங்கா ஆகிய தொழிற்பூங்காக்களை சிப்காட் நிறுவனம் நிறுவி இருக்கிறது.

இன்றைக்கு திறந்திருக்கிற ரூ.210 கோடி மதிப்பில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய தொழிற்பூங்காவில் இதுவரை 22 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

7-வதாக 2728 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு பெறப்பட்டுள்ளது. 6,682 பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. 8-வது தேன்கனிகோட்டை வட்டம் நாகமங்கலம் கிராமத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டிட்கோவுடன் இணைந்து விடியல் ரெசிடென்ஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் மூலமாக பணியாளர்கள் தங்குவதற்கு 64 ஏக்கரில் தொழிலாளர் குடியிருப்பு கட்டி வருகிறார்கள்.

முதல் கட்டமாக 6 ஆயிரம் பேர் தங்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் மகளிர் பாதுகாப்பு, வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 9-வதாக ஐ.டி. நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்தர ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றுக்கான மையமாக ஓசூரை உருவாக்க போகிறோம். மேலும் அறிவுசார் வழித்தட திட்டத்தையும் செயல்படுத்த போகிறோம்.

இதன்மூலம் அறிவுசார் பொருளாதாரம் பெருமளவு அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி நன்கு மேம்படும். 10-வது ஓசூரில் 5 லட்சம் சதுரடியில் ரூ.400 கோடி மதிப்பில் டைடல்பார்க் நிறுவப்படுகிறது. இதில் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 11-வது இது எல்லாவற்றுக்காக ஓசூர் விமான நிலையத்தை உருவாக்க முக்கியத்துவம் தருவோம்.

ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன்.

இந்த புதிய விமான நிலையத்தை அமைக்க ஓசூர் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய பொருத்தமான நிலப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை டிட்டோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த பன்னாட்டு விமான நிலையம் மற்றுமொரு புதிய வளர்ச்சிப் பாதையில் ஓசூரை பயணிக்க வைக்கும். இன்னும் பல திட்டங்களை செய்து கொண்டு வருகிறோம். அதனால்தான் மற்ற மாநிலங்களோடு போட்டிபோடும் வகையில் இன்றைக்கு முன்னேறி இருக்கிறது.

அடுத்ததாக அக்டோபர் 9, 10-ந்தேதி கோவையில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *