திருநெல்வேலி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை
1 min read
Tirunelveli: Man gets 5 years in prison for sexually assaulting minor girl
19/9/2025
கடந்த 2019-ம் ஆண்டு வடசேரியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 57) என்பவர் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு கிறிஸ்டோபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, இன்று கிறிஸ்டோபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி (தற்போது ஓய்வு), சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் கூடங்குளம் காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 20 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.