June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

மேற்கு வங்க மாநில தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

1 min read

West Bengal State Day: President and Prime Minister extend greetings

20.6.2026
மேற்கு வங்க மாநில தினமான ‘பஸ்சிம்பங்கா திவாஸ்’ நேற்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அம்மாநில மக்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

1947 ஜூன் 20 இந்தியப் பிரிவினையின் போது, அப்போதைய வங்காளச் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மேற்குப் பகுதி இந்திய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்றும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிழக்குப் பகுதி (தற்போதைய பங்களாதேஷ்) பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானமே இன்றைய ‘மேற்கு வங்கம்’இந்திய நாட்டின் ஒரு அங்கமாக உருவாவதற்குக் காரணமாய் அமைந்தது. டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்கள் இந்த எல்லையை வகுத்து, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளை இந்தியாவுடன் தக்கவைப்பதில் முக்கியப் பங்காற்றினர்.

மத்திய அரசின் ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்’ திட்டத்தின் கீழ், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளிலும் மேற்கு வங்க மாநிலத் தினம் கலை நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் மேற்கு வங்க மக்கள் மற்றும் கலைக் குழுவினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது அறிக்கையில், மேற்கு வங்க மக்களின் வளமான கலாச்சாரம், இலக்கியம் மற்றும் கலைப் பங்களிப்புகளைப் பாராட்டி, மாநிலம் மேலும் அமைதியுடனும் வளத்துடனும் திகழ வாழ்த்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், அறிவியல், இலக்கியம் மற்றும் ஆன்மீகத் துறைகளிலும் மேற்கு வங்கத்தின் பங்கு ஈடு இணையற்றது என்று குறிப்பிட்டு, அம்மாநில மக்கள் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தூணாக விளங்க வாழ்த்தியுள்ளார்.

இவரை தொடர்ந்து, துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலத்தின் பாரம்பரியப் பெருமைகளை நினைவு கூர்ந்து, மக்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *