62 ஆண்டுள் சேவையாற்றிய மிக்21 போர்விமானம் ராணுவத்தில் இருந்து விடைபெற்றது
1 min read
MiG-21 fighter jet retires from service after 62 years
26.9.2025
60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் இன்று விடைபெற்றன.
விமானப்படையில் இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் சேவையில் இருந்து வந்தன.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 26) சண்டிகரில் நடைபெற்ற பிரியாவிடை விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
விமான படைத் தளத்தில் நடந்த விழாவில் புதிய தேஜஸ் போர் விமானங்கள் உடன் MiG-21 விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது. MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.
இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், விம்மன படை தளபதி ஏபி சிங் மற்றும் பிற படைத் தளபதிகள் கலந்துகொண்டனர்.
சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.
இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.
62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும்.