June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு விவரம்

1 min read

Details of restrictions on keeping dogs in Chennai

3.10.2025
பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்திடும் வகையில் அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையினையும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் வழங்குதல் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து கண்காணித்தல் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதள சேவையினை மேயர் ஆர்.பிரியா இன்று (03.10.2025) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மேயர் பேசியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, விதிகள் 2023, பிரிவு 292ன் படி பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

செல்லப்பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50/-ஐ உரிமக் கட்டணமாக செலுத்தி உரிமம் பெற்று வருகின்றனர். கடந்த 2024 ம் ஆண்டு முதல் 2025 – செப்டம்பர் மாதம் வரை 12,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (www.chennaicorporation.gov.in-ல் Pet Animal Licence) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணி உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் உரிமையாளர்களின் பொறுப்புகள்:-

  • கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம், தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் ஆகியவற்றிற்கு செல்லப்பிராணியின் உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள எந்தவொரு சாலை/தெரு/சாக்கடையிலும் தனது நாய்/செல்லப்பிராணியை கழிவு ஏற்படுத்த எந்த உரிமையாளரோ அல்லது நாயின் பொறுப்பாளரோ அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் நாய் சாலை/ தெரு/ சாக்கடையில் கழிவு ஏற்படுத்துவதை சுத்தம் செய்து முறையாக அப்புறப்படுத்துவது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.
  • தங்கள் செல்லப்பிராணிகளை மற்றவர்களுக்கு தொந்தரவு அல்லது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தாமல் வைத்திருக்க வேண்டும்.
  • செல்லப் பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் அழைத்துச் செல்லும் போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முகமூடி இல்லாமல் திரிய விடுதல் அல்லது அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகள் வளர்ப்போர் இந்த நிபந்தனைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கைவிடப்படும் செல்லப்பிராணிகளை கண்காணித்தல்:

சமீபகாலமாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கைவிடப்படும் வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆகவே, செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், இந்த தடுப்பூசி போட்ட நாள் முதல் ஓராண்டு காலத்திற்கு மட்டும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுக்கவும், அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் மைக்ரோ சிப்பிங் செலுத்துவதும் பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ சிப்பில் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *