June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம்: – எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குற்றச்சாட்டு

1 min read

appointed after receiving a bribe of Rs. 888 crore: – Edappadi Palaniswami, Annamalai allege

29.10.2025
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

“எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும்,

இதில் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் நடத்திய சோதனைகளின் விளைவாக இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

வேலை மோசடி' (JOB RACKET ) 'முறையில் நடைபெற்ற இந்த ஊழலில் திமுக அரசின் இந்த துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து வேலை வாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் ரூ.25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலித்ததாகவும், அந்த பணத்தை ஒருசில நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த இமாலய ஊழல் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய காலக்கட்டங்களில் நடைபெற்றதையும், இது தொடர்பாக கிடைத்த பல ஆவணங்களை அமலாக்கத்துறை தமிழக காவல்துறை டி.ஜி.பி-க்கு அறிக்கையுடன் சமர்ப்பித்து, ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களும் இணைக்கப்பட்டு, இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. தமிழக காவல்துறை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான் தங்களால் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை மூலம் பதிவு செய்ய வலியுறுத்துகிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி. அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும் திமுக அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருக்கிறது. அமலாக்கத் துறை இப்போது மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று உள்ளன.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ. 888 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளது. 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் பேர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாமல் மறுக்கப்பட்டன. திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கியது. முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார். நகராட்சி நிர்வாகத் துறைக்குள் ஆழமாக வேரூன்றிய ஊழல் மோசடியை அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. திமுக அரசின் கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுவே மோசடிக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்கப்படுவதையும், தமிழக மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதையும் உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *