June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

ராஜபாளையம் கொலைக்கு அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

1 min read

Annamalai, Edappadi Palaniswami condemn Rajapalayam murder

11.11.2025
ராஜபாளையத்தில் கோவில் காவலாளிகள் 2 பேரை கொலை செய்துவிட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவத்தை குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோவில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்-அமைச்சரே முழு பொறுப்பு.

ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக திராவிட மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்ப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள, பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள திருக்கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, காவல்துறையினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.

திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, காவல்துறைக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *