June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க. வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

SIR issue: Supreme Court orders Election Commission to respond to DMK’s case within 2 weeks

11.11.2025
தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ. ஆர்.) தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன.

எனினும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை (எஸ்.ஐ.ஆர்.) தீவிரத்துடன் மேற்கொண்டு வருகிறது. இந்த பணியை ரத்து செய்யக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் விவேக் சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தன்னிச்சையானது. குழப்பம் ஏற்படுத்தும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இதேபோல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் வக்கீல் பி.சீனிவாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வக்கீல் பி.ஸ்ரீராம், புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா சார்பில் வக்கீல் தேவ்யானி குப்தா, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா சார்பில் வக்கீல் ராதா ஷ்யாம் ஜனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் வக்கீல் பிரசன்னா ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்

மா.கம்யூனிஸ்டு சார்பிலான ரிட் மனுவை வக்கீல் பரஸ் நாத் சிங் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார். இதற்கிடையே தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை எதிர்த்த மனுக்களுடன், தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களையும் நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.
இதுபோல், பிற மாநிலங்களில் திருத்தப்பணிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களும் அதே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகிய இன்று 2 பேர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அப்போது இந்த வழக்கில், 2 வாரங்களில் பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து அதற்கான நோட்டீசையும் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மனுக்களை விசாரிக்க வேண்டாம் என்று அது தொடர்பான மாநிலங்களின் ஐகோர்ட்டுகளையும் கேட்டு கொண்டுள்ளது.

இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நவம்பர்-டிசம்பர் காலங்களில் மழை நிவாரண பணிகளில் அதிகப்படியான அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பார்கள். டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, நிறைய பேர் ஊரில் இருக்க மாட்டார்கள். ஜனவரியில் அறுவடை திருநாளான பொங்கல் வருகிறது. அதனால், தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது என வாதிட்டார். இந்த வழக்கு, வருகிற 26-ந்தேதி மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *