June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகார் சட்டசபைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி

1 min read

Prashant Kishor’s party suffers crushing defeat in Bihar assembly elections

14.11.2025
தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் ‘கிங் மேக்கர்’ என்று அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. என்று பல கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார். இவரது வியூகத்தின் மூலம் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளன.

2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று முதல்-மந்திரியாக வியூகம் அமைத்து கொடுத்தவர் இவரே. ஏன், தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைவதற்கு அவரது தேர்தல் வியூகமே காரணம். இதற்காக, பல கோடி ரூபாயை ஊதியமாகவும் பெற்றுக்கொண்டார்.

பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர், ஒரு கட்டத்தில் தேர்தல் வியூகம் வகுப்பதில் இருந்து ஒதுங்கி, சமூக ஆர்வராக மாறி, ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம் 2022-ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. கட்சியை வளர்ப்பதற்காக சொந்தமாக வியூகம் வகுத்த அவர், பீகாரில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பாத யாத்திரை மேற்கொண்டார்.

சென்ற இடமெல்லாம் மக்களின் ஆதரவு பிரசாந்த் கிஷோருக்கு கிடைத்த நிலையில் உற்சாகமானார். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடும் முடிவை அவர் எடுத்தார். மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், 238 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிட்டது.

வேட்பாளர்கள் தேர்வின்போதே பார்த்து.. பார்த்து.. ஒவ்வொருவரையும் பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்தார். “இந்த தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்த அவர், “150 தொகுதியில் ஒன்று குறைந்தாலும் அது தோல்வியாகவே கருதப்படும்” என்றும் கூறினார்.

இறுதிக்கட்டத்தில், பெரும் நம்பிக்கையோடு அவர் இருந்த நேரத்தில்தான், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்தன. எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சிக்கு 2 முதல் 5 தொகுதிகள் வரையே கிடைக்கும் என்றும் கூறினர்.

கருத்து கணிப்பு முடிவுகளால் வெகுண்டெழுந்த பிரசாந்த் கிஷோர், “நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. அவ்வாறு நடந்துவிட்டால் நான் அரசியலைவிட்டே விலகுவேன்” என்று சவால்விட்டார். ஆனால், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்பில் வெளிவந்ததுபோலவே அமைந்துவிட்டன.

பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சுராஜ் கட்சிக்கு கருத்து கணிப்பில் கூறப்பட்டதுபோல ஒன்றிரண்டு தொகுதிகள் கூட கிடைக்காமல் போய்விட்டது. தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் கிங் மேக்கராக ஜொலித்த பிரசாந்த் கிஷோர், தேர்தலில் மண்ணை கவ்விவிட்டார். இனி சவாலின்போது தான் அளித்த வாக்குறுதியான, அரசியலை விட்டு விலகுவதாக கூறியதை நிறைவேற்றுவாரா? என்பதே அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக உள்ளது. எதுவாயினும் தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *