12 பேரை தாக்கிக் கொன்ற யானை இறந்தது
1 min read
Elephant that attacked and killed 12 people dies
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பனிரெண்டு பேரை தாக்கி கொன்ற யானை நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓவேலி பகுதியில் சுமார் 12 பேரை தாக்கிக் கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை கடந்த செப்டம்பர் மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கடந்த 25 -ந் தேதி இரவு இந்த ராதாகிருஷ்ணன் யானையை வனத்துறையினர் பலத்த பாதுகாப்போடு லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் விட்டனர்.
கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட யானை சில நாட்கள் மட்டும் அங்கிருந்து நடந்து அருகிலுள்ள கோதையாறு அணை பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திடீரென ராதாகிருஷ்ணன் யானை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
அந்த யானை உயிரிழப்புகான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவலாக பேசப்பட்ட நிலையில், தற்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் யானை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளை தெரிவித்து உள்ளார்.
அதாவது கடந்த 16 ம் தேதி பிற்பகல் திடீரென யானையிடமிருந்து சிக்னல் கிடைக்கவில்லை, 18 ம் தேதி காலை கோதையாறு அணை அருகே யானை சாலையில் விழுந்து கிடந்து உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. அப்போது 20 அடி உயரத்தில் இருந்து யானை விழுந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.
அந்த உயரமான பகுதியில் பாறை இருந்தது யானையின் கால்கள் சறுக்கி 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இருக்கலாம் என்பது அங்கு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது யானைக்கு 30 வயது இருக்கும் அதிக எடை காரணமாக உயரத்தில் இருந்து விழும்போது பலத்த காயம் ஏற்பட்டு மண்டை ஓடு உடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளது.
இந்த சம்பவத்தில் நெல்லை கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன், குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பிரேத அந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
சுமார் 4 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது. மேலும் மதுரையில் உள்ள வன மற்றும் வன உயிரின குற்ற தடுப்பு துறையின் துணை இயக்குனரும் நேரில் வந்து சம்பவத்தை ஆய்வு செய்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.