June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் விவரம் வெளியீடு

1 min read

Tirupati Temple Vaikunta Ekadashi Darshan Ticket Details Released

26/11/2025
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.

முதல் 3 நாட்களுக்கு 1+3 குடும்ப ஒதுக்கீட்டின் கீழ் டோக்கன்கள் ஒதுக்கப்படும், இதில் நான்கு உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் நவம்பர் 27-ந் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 1-ந் தேதி மாலை 5 மணி வரை தேவஸ்தான வலைத்தளம், தேவஸ்தான மொபைல் செயலி அல்லது அரசு வாட்ஸ்அப் பாட் (9552300009) வழியாக பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் தேர்வு முடிவுகள் டிசம்பர் 2-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும்.

மீதமுள்ள நாட்களுக்கான தரிசன அட்டவணை மற்றும் டிக்கெட் விற்பனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சர்வ தரிசனத்திற்கு, சாதாரண பக்தர்கள் வைகுந்தம் வரிசை வளாகம்2 மூலம் டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வ தரிசனத்தைப் பெறலாம்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கு (ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை), ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ரூ.300 கட்டண தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

சுய நெறிமுறை பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் நேற்று 72,677 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,732 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *