August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆசிரியர் தேர்வில் தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி: அன்புமணி கேள்வி

1 min read

85,000 students failed in Tamil subject in teacher exam: Anbumani questions

29.11.2025
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 1,996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில், கட்டாயத் தமிழ்ப் பாடத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தோல்வியடைந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழைக் கற்கத் தேவையற்ற கல்வி முறையை தமிழக ஆட்சியாளர்கள் உருவாக்கியதன் விளைவு தான் இதுவாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் ஆகிய பணியிடங்களுக்கு 1,996 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த அக்டோபர் 12-ம் நாள் நடத்தப்பட்டன. அத்தேர்வுகளை மொத்தம் 2.36 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அத்தேர்வுகளின் அங்கமான கட்டாயத் தமிழ்ப் பாடத் தேர்வில் 85 ஆயிரத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில், அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்ப் பாடத் தேர்வு கடந்த 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் ஆசிரியர் பணிக்குத் தேவையான பாடங்கள், உளவியல், பொது அறிவு ஆகியவற்றிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு 150 வினாக்கள் கேட்கப்படும்; அத்துடன் கட்டாயத் தமிழ்ப் பாடத்தில் 50 மதிப்பெண்களுக்கு 30 வினாக்கள் கேட்கப்படும். கட்டாயத் தமிழ்ப் பாடத்தில் 40 சதவீதம், அதாவது 20 மதிப்பெண்களை எடுத்தால் மட்டும் தான் தேர்ச்சி பெற முடியும். கட்டாயத் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான், பாடம் சார்ந்த விடைத் தாள் மதிப்பீடு செய்ய முடியும். இந்தத் தேர்வில் தான் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அதாவது 36 சதவீதம் தோல்வி அடைந்துள்ளனர். பாடம் சார்ந்த தேர்வை இவர்கள் சிறப்பாக எழுதியிருந்தால் கூட, அந்த விடைத் தாள் கூட திருத்தப்படாமல் இவர்கள் ஆசிரியர் பணிக்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் பணிக்கான கட்டாயத் தமிழ்ப் பாடத் தேர்வில் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தோல்வியடைவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்ப்பாடத் தேர்வுகளில் ஏராளமான தேர்வர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, கல்வியியலில் பட்டப்படிப்பு என குறைந்தது 3 பட்டங்களை பெற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் பல எம்.பில் எனப்படும் இளம் முனைவர் பட்டத்தையும், பிஎச்.டி எனப்படும் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்களாக இருப்பார்கள். போட்டித் தேர்வுக்கான கட்டாயத் தமிழ்ப் பாடம் என்பது பத்தாம் வகுப்பு நிலையில் தான் இருக்கும். முனைவர் நிலைக்கு முன்னேறி 5 பட்டங்களை பெற்றவர்கள் கூட, தாய்மொழியான பத்தாம் வகுப்பு நிலையிலான கட்டாயத் தமிழ்ப் பாடத்தில் 20 மதிப்பெண்களை எடுக்க முடியாமல் தோல்வியடைகிறார்கள் என்றால் நமது கல்வி முறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர முடியும்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு தேர்வர்களையோ, அவர்களின் திறமையையோ குறை கூற முடியாது. மாறாக, தமிழ்நாட்டின் கல்வி முறையைத் தான் குறை கூற வேண்டும். தமிழ்க் கட்டாயப் பாடத் தேர்வில் தோல்வியடைந்த தேர்வர்கள் அவர்களின் முதன்மைப் பாடத்தில் வல்லமை பெற்றவர்களாக இருக்கக் கூடும்; அதற்கானத் தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்றவர்களாகக் கூட இருக்கக்கூடும். ஆனாலும் அவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைவதற்கு காரணம் அவர்கள் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காதது தான். இதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் நோக்கத்துடன் கடந்த 2006-ம் ஆண்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சட்டம் கொண்டுவரப்பட்டு 19 ஆண்டுகள் ஆகியும் நடப்பாண்டில் கூட பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட வில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதை விசாரணைக்குக் கொண்டு வரவும், வழக்கில் சாதகமானத் தீர்ப்பைப் பெற்று தமிழைத் தமிழ்நாட்டின் கட்டாயப் பாடமாக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் இந்தச் சட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிற கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும் இச்சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அப்பட்டமான பொய்யை மாநிலக் கல்விக் கொள்கையில் திமுக அரசு கூறியுள்ளது. இதை விட பெருங்கொடுமை என்னவென்றால், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வாரத்திற்கு தலா 7 பாடவேளைகள் தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் ஒதுக்கப் பட்டிருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டு விட்டது.

இந்தியாவிலேயே, ஏன்… உலகத்திலேயே தாய்மொழியை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் ஒருவர் முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்றால், அது தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியமாகும். இது தான் தமிழக ஆட்சியாளர்கள் தமிழ் வளர்க்கும் லட்சணம் ஆகும். அன்னை தமிழால் ஆட்சிக்கு வந்தவர்கள் இப்படித் தான் தமிழை படுகொலை செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் போட்டித் தேர்வுகளில் கட்டாயத் தமிழ்ப் பாடத்தில் தேர்வர்கள் தோல்வியடைவதற்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த அவலநிலையை மாற்றி அனைவரும் அன்னைத் தமிழை ஆர்வத்துடன் படிக்கும் நிலையை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *