நீதிபதி ஜி.ஆர்.சுவமிநாதனை பதவி நீக்கம் செய்ய முடியுமா?
1 min read
Can Justice G.R. Swaminathan be removed from office?
9.12.2025
மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதியாக இருப்பவர் ஜி.ஆர்.சுவாமிநாதன். பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர். அண்மையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இவரது உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாமல் மேல்முறையீடு செய்து இருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்ட நிலையிலும், தமிழக அரசு தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
அதற்கு மாறாக, தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிரான அவதுாறு பிரசாரத்தில், திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். லோக்சபாவில் நேற்று, இண்டியா கூட்டணியினர் சார்பில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீஸ் சபாநாயகரிடம் தரப்பட்டது. எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர், பாலு, பிரியங்கா, அகிலேஷ் யாதவ் ஆகியோர் இதை சபாநாயகரிடம் வழங்கினர்.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் தங்கள் கையெழுத்தை பதிவிட்டு உள்ளனர். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மற்ற மாநில கட்சிகளின் எம்பிக்களும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.
உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக லோக்சபா எம்.பி.,க்கள் 100 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 50 பேர் கையெழுத்திட்டு, முறையே சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரிடம் மனு தர வேண்டும்.
இந்த மனுவை ஏற்பதா, இல்லையா என்பதை சபாநாயகர்/ராஜ்யசபா தலைவர் முடிவு செய்வார். ஏற்றுக்கொள்ளப்பட்டால், மூன்று உறுப்பினர் குழு அமைத்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
விசாரணைக்குழுவானது, தங்கள் அறிக்கையை, சபாநாயகர்/ ராஜ்யசபா தலைவரிடம் சமர்ப்பிக்கும். சம்பந்தப்பட்ட நீதிபதி குற்றவாளி என்று குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தால், பாராளுமன்ற அவைகளின் விவாதத்துக்கும், ஓட்டெடுப்புக்கும் விடப்படும்.
இரு அவைகளிலும், கலந்துகொண்டு ஓட்டளிக்கும் உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகே, அவர் நீதிபதியை பதவி நீக்கும் செய்து உத்தரவிடுவார்.
திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு இத்தகைய பலம் லோக்சபாவிலும் இல்லை; ராஜ்யசபாவிலும் இல்லை. எனவே, அவர்களது மனு, ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டு விடுவதற்கான வாய்ப்பு தான் இருக்கிறது.
அப்படியெனில், அவர்களது நோக்கம் என்ன? ‘தாங்கள் இந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக இப்படியெல்லாம் செய்தோம்’ என்று கூறி தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவே இத்தகைய மனுக்களை கொடுத்து நாடகம் ஆடுகின்றனர் என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.