தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு இடத்தை தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
1 min read
Supreme Court orders selection of location for Navodaya schools in Tamil Nadu
15.12.2025
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, குமாரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த பள்ளிகள், தமிழ் கற்றல் சட்டம், 2006ஐ மீறாது எனக்கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும், 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்கும்படி 2017, செப்., 11ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, 2017, டிச., 11ல் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. பின் பல ஆண்டுகள் இந்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே இருந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் விசாரணைக்கு பிறகு வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி நாகரத்னா நீங்கள் நமது இந்திய குடியரசின் அங்கம் இல்லையா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், எங்கள் மாநிலம், எங்கள் அரசு எங்கள் தயவு செய்து யாரும் சொல்லாதீர்கள். இது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நாடு. இங்கு மத்திய அரசு, மாநில அரசும் எல்லா விஷயத்திலும் அமர்ந்து பேசி தீர்வை கொண்டு வர வேண்டும் என்றார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்தி திணிப்பை செய்வதால் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ராகரத்னா, தயவு செய்து தமிழகத்தில் மாணவர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்காதீர்கள் என கருத்து தெரிவித்தார்.
இதற்கு வில்சன்,’ தயவு செய்து தமிழகத்தில் அவ்வாறு நடப்பதாக சொல்லாதீர்கள். நாட்டிலேயே அதிகளவில் மாணவர்கள் பள்ளி சேர்க்கையை தமிழக அரசு தான் மேற்கொண்டு வருகிறது என்றார்.
நீதிபதி நாகரத்னா கூறும்போது மத்திய அரசிடம் கல்வி நிதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்றால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மத்திய அரசை அணுகிபேச்சுவார்த்தை நடத்த வேண்டியதுதானே.
தமிழக அரசு அதிகாரிகளை மத்திய அரசிடம் அனுப்பி பேச வைக்க வேண்டியதுதானே என்றார்.
தொடர்ந்து, நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்துக்குள் கண்டறியும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.