June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் ரூ.98 கோடியில் காயிதே மில்லத் நூலகம்- முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

1 min read

M.K. Stalin laid the foundation stone of the Rs. 98 crore Qaide Millat Library in Nellai

21.12.2025
பாளையங்கோட்டையில் அண்ணா, கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் மாணவ-மாணவிகள், போட்டி தேர்வாளர்கள், உயர் கல்வி கற்பவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டுமென்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார். மேலும் முதலமைச்சரிடமும் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து நூலகம் அமைப்பதற்காக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு தேர்வு செய்தார். அந்த இடத்தில் நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அங்கு 3 ஏக்கர் நிலத்தில் 69 ஆயிரத்து 414 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைப்பதற்கு இடம் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நூலகம் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இதில் உயர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்கள், போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அரங்கம், மாநாட்டு கூடம் வசதி, குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் படிப்பதற்கு தனி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெறுகிறது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றே அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படு கிறது. இங்கு போட்டித் தேர்விற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகிறது. இந்த நூலகம் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்க்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *