மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு திட்டமிட்டே முட்டுக்கட்டை – அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
Kanimozhi doesn’t know what’s happening in Tamil Nadu – Annamalai attack
5.2.2026
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்து இருந்தார். அவர் கூறும்போது, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழகத்திற்கு மராட்டியத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் ஓட்டுகளே பாஜகவிற்கு முக்கியம். அவர்களின் வளர்ச்சியல்ல என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
திமுக எம்.பி.கனிமொழி உண்மை தெரியாமல் பேசி வருகிறார். அவரது சகோதரரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஊழல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்கு தெரியவில்லை. தமிழகத்தில் தற்போது ரூ.35.701 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு அடைந்த தோல்வியால் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது.
இந்த ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த தேவையான 4,326 ஹேக்டர் நிலத்தில் 2025 டிசம்பர் வரை தமிழக அரசு வெறும் 24 சதவீதம் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தி உள்ளது.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நிலம் கையக்கபடுத்தப்படாமல் ஏராளமான திட்டங்கள் இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதே நிலைதான் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தேசியநெடுஞ்சாலை திட்டங்களுக்கும் நிலவுகிறது. ஊழல் நிறைந்த திமுக அரசு திட்டமிட்டே முட்டுக்கட்டைகளை போடுவதால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
எப்போதும் பொய்களை பரப்புவதை விட்டுவிட்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை முடிக்க நிலம் கையகப்படுத்துவதற்கு இவ்வளவு தாமதம் ஏன்? என்று உங்களின் சகோதரரிடமே (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்) கேள்வி கேளுங்கள் என அதில் தெரிவித்துள்ளார்.