சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம்- மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
1 min read
Don’t waste time on social media – PM Modi advises students
6.2.2026
பொது தேர்வுகளை நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் அணுகுவது குறித்து பரிஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய விவாதம்) என்ற தலைப்பில் மாணவர்களுடன் ஆண்டுதோறும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்தவகையில் மாணவ – மாணவிகளுடன் உரையாடிய காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் இன்று காலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
அதில், நாட்டில் டேட்டா மலிவு விலையில் கிடைப்பதால் இணையத்தில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும், வாழ்க்கையையும் கல்வித் திறன்களையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையாக தேர்வுகளை மாணவ -மாணவிகள் எப்படி அணுக வேண்டும் என்பதை குறித்து விரிவாக ஒரு கலந்துரையாடல் நடத்தினேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மாணவர்களுடன் பிரதமர் மோடி பேசியதாவது:-
உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது சக நண்பர்கள் என்ன கூறினாலும், உங்களுக்கு பிடித்த யோசனைகளை மனதில் வைத்து, அதனைப் பின்பற்றுங்கள். நமது இலக்கு எப்போதும் அடையக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் எளிதில் இலக்கை அடைய முடியாது. உங்கள் ஆசிரியர்களை விட ஒரு படி மேலே இருங்கள்.
வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சமநிலை இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பக்கம் அதிகமாக வளைந்தால் விழுந்துவிடுவீர்கள். வாழ்க்கைத் திறன்களும் தொழில்சார் திறன்களும் சம அளவில் முக்கியமானவை. அவை கல்வி மூலமாக மட்டுமே பெற இயலும்.
கல்வியை சுமையாக நினைக்கக்கூடாது. அதற்கு நமது முழு ஈடுபாடும் தேவை. மதிப்பெண்களில் கவனம் செலுத்துவதை விட, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வெற்றி உங்கள் பெற்றோரின் மரியாதையாக மாறும்.
உங்களுக்கு கேமிங்கில் ஆர்வம் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் டேட்டா மலிவாக கிடைக்கிறது என்பதற்காக சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்கி அதில் ஈடுபடாதீர்கள். வேடிக்கையாக கூட அதைச் செய்யாதீர்கள். பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிந்து போவார்கள். நாட்டில் சூதாட்டத்தை ஊக்குவிக்க வேண்டியதில்லை. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நான் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளேன். இருப்பினும், கேமிங் என்பது ஒரு திறமை.
நான் கடந்த காலத்தை எண்ணுவதில்லை. மீதமுள்ளதை நான் எண்ணுகிறேன். எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். உங்களுக்கு முன்னால் இருப்பதை வாழ முயற்சி செய்யுங்கள் .
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமருடனான கலந்துரையாடலில் சொந்தமாக இயக்கிய பாடல்களை மாணவர்கள் பாடினர். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற, அனைத்து மாணவர்களுக்கும் அஸ்ஸாமின் பாரம்பரிய சால்வையான கமோசாவை பிரதமர் அணிவித்தார்.