சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறம் மாறிய தங்க மேற்கூரை
1 min read
Gold roof of Sabarimala Ayyappan Temple changes color
17.6.2026
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. 1998-ம் ஆண்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா சார்பில் இந்த கோவிலின் மேற்கூரை மற்றும் துவார பாலகர் சிலைகளில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக அப்போது 33 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 2025-ம் ஆண்டு துவார பாலகர் சிலைகள் மற்றும் பிரதான கதவு நிலையை அழகுப்படுத்துவதற்காக அவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆனி மாத சிறப்பு பூஜை நடந்து வருகிறது.தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்றுமுன்தினம் காலையில் தங்க மேற்கூரை பகுதியில் ஓர் இடத்தில் தங்க தகடு நிறம் மங்கிய நிலையில் திராவகம் வடிந்தது போல் காணப்பட்டது. இதைபார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவிதாங்கூர் தேவஸ்தான திருவாபரண பொறுப்பு கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் கோவிலுக்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். காலையில் நெய்யபிஷேகம் நடத்த வந்த பக்தர்களில் யாராவது பக்தி மிகுதியால் நெய்யை எடுத்து தங்க கூரையில் தெளித்து இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
மேலும் தங்கத்தை பிரித்து எடுக்க யாராவது திராவகத்தை வீசி இருப்பார்களோ? என்ற கோணத்திலும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.