பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பரை பாலியல் தாக்குதல்- குற்றவாளிக்கு தண்டனை
1 min read
Convict sentenced in Pavurchatram railway gatekeeper sexual assault case
13.2.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலைய கேட் கீப்பரை பாலியல் தாக்குதல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு தென்காசி நீதிமன்றம் 5 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு ரயில்வே கேட் கீப்பராக சுந்தர் என்பவரின் மனைவி வித்யாசந்திரன் (வயது 33) பணிபுரிந்து வந்துள்ளார்.இவர் கடந்த 16.02.2023 அன்று பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே உள்ள தனது அறையில் இரவு 8.45 மணிக்கு தனியாக இருந்தபோது அவரது அறைக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் விமலா ராணியை கீழேத்தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது விமலா ராணி அவரிடம் இருந்து தப்பிக்க போராடியதோடு கூச்சல் போட்டுள்ளார். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது பற்றி தென்காசி ரயில் நிலைய காவல் நிலையத்தில் விமலா ராணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பத்னாபுரம் தாலுகா, வெஞ்சேயம்புபு அஞ்சல், வாழவிழா பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் அனீஷ் (வயது 27) என்பவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்குப்பின் அவரை சிறையில் அடைத்தனர். அதன்பின் ஜாமினில் வெளிவந்த அனிஷ் ஏற்கெனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாவூர்சத்திரம் கேட் கீப்பர் பாலியல் தாக்குதல் வழக்கில் திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்த அனிஷை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு மகிளா நீதிமன்றம்) பி.ராஜவேலு முன்பு ஆஜர்படுத்தினார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.ராஜவேலு குற்றவாளி அனீஷுக்கு 5 வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் இந்த வழக்கில் அரசு தரப்பு மகிளா நீதிமன்ற வழக்கறிஞர் கவிதா ஆஜராகி வாதாடினார்.