லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கவே முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்
1 min read
Ladakh cannot be granted statehood – Central government’s plan
13.2.2026
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு மாநில அந்தஸ்தோ அல்லது அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்தோ வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் லடாக்கின் முக்கிய அமைப்புகளான ‘லே அபெக்ஸ் பாடி’ (LAB) மற்றும் ‘கார்கில் ஜனநாயக கூட்டணி’ (KDA) தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு தனது நிலப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
லடாக்கின் கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாக்க சிறப்பு அந்தஸ்து கோரப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக பிராந்திய கவுன்சில் மாதிரியான ஒரு நிர்வாக முறையை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, லடாக் தன்னாட்சி மேம்பாட்டுக் குழுவின் (LAHDC) தலைமை நிர்வாக அதிகாரி ‘முதலமைச்சர்’ போலவும், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி துணை முதலமைச்சர் போலவும் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தை கேலிக்கூத்து என்று கூறி LAB மற்றும் KDA அமைப்புகள் நிராகரித்துள்ளன.
மாநில அந்தஸ்து மற்றும் 6-வது அட்டவணை என்ற எங்களின் முக்கியக் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று KDA இணைத் தலைவர் அஸ்கர் அலி கார்பைல் தெரிவித்தார்.
இதற்கிடையே லடாக் மாநில அந்தஸ்திற்காக போராடிய சுற்றுச்சூழல் விஞ்ஞானி மற்றும் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் லடாகில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக சதி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.