June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.8,423 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

1 min read

Rs 8,423 crore temple lands recovered; Chief Minister M.K. Stalin informs

15.2.2026
அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.8,423 கோடி மதிப்புள்ள 8,106 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் இன்று (பிப்., 15) வள்ளலார் மாநாட்டை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வள்ளலார் காட்டிய அறநெறிகளை பின்பற்றுபவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்துலக வள்ளலார் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

அறநிலையத் துறையில் திராவிட மாடல் அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது.

4,192 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
திருக்கோவில்கள் சார்பில் 2800 திருமணங்கள் செய்து வைத்துள்ளோம். 19 திருக்கோவில்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழகத்தின் கடமை. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொல்லி உலகிற்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசும் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுகிறது. ஏழை மக்களின் பசியை ‘பிணி’ என்று சொன்னார் வள்ளலார். அந்த பிணியை நீக்கும் மருந்துதான் திராவிட மாடல். அதற்கு காலை உணவுத் திட்டம், தாயுமானவர் திட்டம் உள்ளிட்டவைதான் சான்று.

வள்ளலார் நகர் பஸ் நிலையத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைத்துள்ளோம். வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லத்தை புனரமைத்தோம்.

நமது பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள். வள்ளலார் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்க கூடாது. பிரிவினை சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல், அன்பும், பண்பும், அறனும், கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்.
இவ்வாறு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  • வள்ளலார் மாநாடு நடந்ததை குறிக்கும் வகையில் இப்பள்ளி வளாகத்தில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.
  • வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்படும். அந்த பள்ளியில் இசை பயிற்சியும் அளிக்கப்படும்.
  • வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும்.
  • வள்ளலார் புத்தகம் அறநிலையத்துறை பதிப்பகம் மூலம் வெளியிடப்படும்.
  • வள்ளலார் பிறந்தநாளை யொட்டி, ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும்.
  • மேட்டுகுப்பம், மருதூர் உள்ளிட்ட இடங்களில் வள்ளலார் அன்னதானக் கூடங்கள் அமைக்கப்படும்.
  • கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்து வரும் பூங்காவுக்கு வள்ளலார் பூங்கா என பெயர் சூட்டப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *